

வடகொரியாவில் தனது அதிகாரத்தை நிலை நிறுத்தும் வகையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினார் அந்நாட்டின் அதிபர் கிம் ஜோங் உன்.
அவரது தந்தை கிம் ஜோங் இல்-லின் 2-வது ஆண்டு நினைவு தினமான செவ்வாய்க்கிழமை இக்கூட்டம் நடைபெற்றது.
ஆட்சியும், அதிகாரமும் தன்னிடத்தில் நிலையாக இருக்கும் என்பதை நாட்டு மக்களுக்கும், பிற நாடுகளுக்கும் உணர்த்தும் வகையில் இக்கூட்டத்தை தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப கிம் ஜோங் உன் உத்தரவிட்டிருந்தார். வடகொரியா தலைநகர் பியாங்யாங்கில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராணுவ அதிகாரிகளும், கிம் ஜோங் உன்னின் விசுவாசிகளும், தென் கொரியாவுக்கு சவால் விடும் வகையிலும், கிம் ஜோங் உன்னை புகழ்ந்தும் பேசினர்.
ஜிம் ஜோங் உன் சமீபத்தில்தான் தனது நெருங்கிய உறவினரும், அரசியல் வழி காட்டியுமாக இருந்த ஜாங் சாங் தெய்க்குக்கு மரண தண்டனையை நிறைவேற்றினார். இது வடகொரியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் நாடு தொடர்ந்து தனது பிடியில்தான் உள்ளது என்பதை உணர்த்த இக்கூட்டத்தை ஜிம் ஜோங் உன் நடத்தியுள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இக்கூட்டத்தில் கிம் ஜோங் உன் மேடைக்கு வந்தபோது, முழு அமைதி நிலவியது. அவர் மேடைக்கு வந்து தலைமை நாற்காலியில் அமர்ந்தபோது அனைவரும் கைதட்டி பெரும் ஆரவாரம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தலைவர்களும் ராணுவ அதிகாரிகளும், தங்களின் ஒப்பற்ற தலைவர் கிம் ஜோங் உன்னின் கௌரவத்தையும் பெருமையையும் நிலை நாட்ட தங்கள் உயிரைத் தரவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர்.