Published : 27 Jul 2016 09:51 AM
Last Updated : 27 Jul 2016 09:51 AM

உலக மசாலா: வெயிலிலும் உருகாத ஐஸ்க்ரீம்!

சுட்டெரிக்கும் கோடையிலும் கைகளில் உருகி வழியாத ஐஸ்க்ரீம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ‘கேஸ்ட்ரோனட்’ என்ற பெயரில் உருகாத ஐஸ்க்ரீம் வந்துவிட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயது ராப் காலிங்டன் இந்த ஐஸ்க்ரீமை உருவாக்கியிருக்கிறார். “அஸ்ட்ரானட் ஐஸ்க்ரீம் என்பது உறைய வைக்கப்பட்ட, உலர வைக்கப்பட்ட ஐஸ்க்ரீம். சிறுவனாக இருந்தபோது விண்வெளி அருங்காட்சியகங்களில் உள்ள கடைகளில் இந்த ஐஸ்க்ரீம்களை சுவைத்திருக்கிறேன். செயற்கைப் பொருட்களைக்கொண்ட, விலை குறைவான ஐஸ்க்ரீம் இது. சூரியன் எவ்வளவு சுட்டெரித்தாலும் இந்த ஐஸ்க்ரீம் உருகாது. இப்போது நான் இயற்கை உணவுகளைத்தான் விரும்புகிறேன்.

இயற்கையான முறையில் அஸ்ட்ரானட் ஐஸ்க்ரீமை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். வேலையை விட்டுவிட்டேன். மூன்றரை வருடங்களில் அமெரிக்கா, மெக்ஸிகோ, கனடா என 20 ஆயிரம் மைல் தூரம் பயணம் செய்தேன். விதவிதமான அஸ்ட்ரானட் ஐஸ்க்ரீம்களை சுவைத்தேன். அந்த அனுபவத்தில் ‘சூப்பர் ப்ரீமியம் ஆர்கானிக் ஐஸ்க்ரீம்’ ஒன்றை உருவாக்கிவிட்டேன். தண்ணீரை வெளியேற்றி, காற்றை புகுத்துவதுதான் இந்த கேஸ்ட்ரோனட் ஐஸ்க்ரீம்.

இதைப் பாதுகாக்க குளிர்சாதனப் பெட்டி தேவை இல்லை. தற்போது நியுயார்க் நகரில் மட்டுமே விற்பனையை ஆரம்பித்திருக்கிறேன். எதிர்காலத்தில் சர்வதேச சந்தைக்கு கொண்டு செல்லும் திட்டமும் இருக்கிறது. மெக்ஸிகன் சாக்லேட் சிப், மின்ட் சாக்லேட் சிப், குக்கீஸ்-க்ரீம் போன்ற 3 சுவைகளில் கிடைக்கின்றன. 2 பார்களைக் கொண்ட ஒரு பாக்கெட்டின் அறிமுக விலை ரூ.400” என்கிறார் ராப் காலிங்டன்.

ஆஹா! வெயிலிலும் உருகாத ஐஸ்க்ரீம்!

உலகம் முழுவதும் போகிமான் கோ விளையாட்டு வேகமாக பரவி வருகிறது. நடந்துகொண்டே விளையாடக்கூடியது இது. ஆரம்பத்தில் சுவாரசியப்படுத்திய போகிமான் கோ, இன்று அதிக அளவில் விபத்துகள் நடப்பதற்குக் காரணமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் ரஷ்யாவைச் சேர்ந்த ஸ்பெர்பேங்க், இன்சூரன்ஸ் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. “விளையாட்டில் அடிமையாகிவிட்டவர்கள் புறச் சூழல்களைப் பொருட்படுத்துவதில்லை.

அதனால் பலரும் மோசமான விபத்துகளில் சிக்கிக்கொள்கிறார்கள். சாலையைக் கடக்கும்போது கவனிக்காமல் வாகனங்களில் மோதிவிடுகிறார்கள். படிகளில் உருண்டு விழுகிறார்கள். மருத்துவமனைக்கு அதிகம் செலவு செய்கிறார்கள். எங்களிடம் போகிமான் கோ அப்ளிகேஷனை இலவசமாக பெற்றுக்கொண்டு, இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் போகிமான் கோ விளையாட்டின் மூலம் ஏற்படும் இழப்புக்கு மட்டுமே காப்பீட்டுத் தொகை 50 ஆயிரம் ரூபாய் வரை அளிக்கிறோம். அதற்குரிய சாட்சிகளைப் புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பணத்தை வைத்து, பாதிப்பிலிருந்து மீண்டு விடலாம். போகிமான் கோ மோசமான விளையாட்டு, ஒருவேளை நீங்கள் அதை விளையாடியே ஆக வேண்டும் என்றால் உங்களுக்கு இன்சூரன்ஸ் தேவைப்படலாம் என்றுதான் விளம்பரம் செய்கிறோம்” என்கிறார் ஸ்பெர்பேங்க் தலைவர் மாக்ஸிம் செர்னின்.

குழந்தையை கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x