

தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுபவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் ஆகியோரிடமிருந்து வாக்குமூலம் சேகரிக்க கடுமையான சித்ரவதை உத்திகளை ஆப்கான் அதிகாரிகள் கையாள்வதாக ஐநா உதவிக்குழு பகீர் புகார் எழுப்பியுள்ளது.
இந்தச் சித்ரவதைகளுக்கு சிறுவர், சிறுமியரும் தப்புவதில்லை என்பதே இந்த அறிக்கை கொண்டு வரும் அதிர்ச்சித் தகவலாகும்.
அதாவது, கடுமையாக அடித்துத் துன்புறுத்துதல், உடல் மற்றும் குதிகால்களில் அடித்தல், அந்தரங்க உறுப்புகளில் மின்சாராம் பாய்ச்சல், தூங்க விடாமல் செய்தல், மற்றும் கொன்று விடுவோம் என்ற மிரட்டல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆப்கானுக்கன ஐநா உதவிக்குழு இதற்காக 469 கைதிகளை நேர்காணல் செய்துள்ளனர். இதில் “39% கைதிகள் சித்ரவதைகள் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தரக்குறைவான நடத்து முறையையும் நம்பகமான முறையில் தெரிவித்துள்ளனர்” என்று இந்த அறிக்கை கூறுகிறது.
சித்ரவதைக்குப் பிரதான காரணம் குற்றங்களை ஒப்புக்கொள்ள வைப்பதே என்கிறது இந்த அறிக்கை.
மேலும், “நேர்காணல் அளித்தவர்களில் பலரும் தாங்கள் ஒப்புக் கொண்டு கையெழுத்திட்ட வாக்குமூல ஆவணங்களில் என்ன எழுதியிருக்கிறது என்றே புரியவில்லை” என்று ஐநா உதவிக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஆப்கான் போலீஸை அனைவருமே சித்ரவதைக்கு பெரிய அளவில் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.
85 சிறுவர் கைதிகளை நேர்காணல் செய்த போது 38 சிறுவர்கள் கடும் சித்ரவதைக்கு ஆளானதை நம்பகமான சாட்சியங்களுடன் எடுத்து வைத்துள்ளனர்.
“சிதரவதை மூலம் உண்மையை வரவழைப்பது நம்பகமான முறை அல்ல, அது சரியாக பலனையும் அளிக்காது, இது நீண்ட கால யுக்தியாக இருக்க முடியாது, இது சட்டவிரோதம், மனிதாபிமானமற்ற செயல், மற்றும் அறவியல் ரீதியாக தவறானது” என்று இந்த அறிக்கை முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சித்ரவதை விவகாரத்தில் ஆப்கான் அரசு ‘சித்ரவதையை முற்றிலும் அகற்றுவதற்கான தேசிய திட்டம்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளைக் கடைபிடித்து வருகிறது.
மேலும் சித்ரவதை செய்ததான குற்றச்சாட்டில் விசாரணையில் இருக்கும் 4 அதிகாரிகள் பெயர்களையும் ஐநா அதிகாரிகளிடத்தில் ஆப்கன் அரசு அளித்துள்ளது.
ஆனால் இந்த விசாரணை மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ, சித்ரவதைகளைக் கையாண்ட அதிகாரிகளுக்கு தண்டனையோ கிடைக்குமா என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை என்று கூறிஉள்ளது இந்த அறிக்கை.