

போர்க்குற்றப்புகார்கள் தொடர்பாக இலங்கை மீது குற்றம்சாட்டி ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வருவது என அமெரிக்கா முடிவு செய்துள்ளதற்கு அதிபர் மகிந்த ராஜபக்சே கண்டனம் தெரிவித்துள்ளார்.
கேகாலியா நகரில் நாட்டின் 66-வது சுதந்திர தின விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ராஜபக்சே பேசியதாவது:
போர்க்குற்றம் புரிந்ததாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக புகார் சொல்ல முயற்சிப்பதை கடுமையான குற்றமாகவே நாங்கள் பார்க்கிறோம். போராடிப் பெற்ற அமைதிக்கு எதிரான செயலாகவே அந்த நடவடிக்கை அமையும். விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிடும்போது பல்வேறு சவால்களை இலங்கை எதிர்கொண்டதை அதிகாரம்மிக்க இந்த நாடுகள் புரிந்து கொள்ள தவறுகின்றன.
தமது தலைவர்களையே விடுதலைப்புலிகள் கொன்றனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் கொன்றார்கள். அது பற்றி எந்த நாடுமே பொருட்படுத்தவில்லையே அது ஏன்? பள்ளிக் குழந்தைகளை விடுதலைப்புலிகள் தமது படைகளில் கட்டாயப்படுத்தி சேர்த்துக் கொண்டது உரிமை மீறலாக யார் கண்ணுக்கும் தெரியாமல்போனது.
வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் இலங்கையின் விவகாரத்தில் அதிகாரமும் பலமும் மிக்க இந்த நாடுகள் தலையிடுகின்றன. பிற நாடுகளில் வாழும் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் பரப்பும் தகவல்களை இந்த நாடுகள் நம்பக்கூடாது.
ஜெனிவாவில் மார்ச் மாதம் நடக்கும் ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானம் இலங்கைக்கு எதிரான தாக்குதல்தான். தமது இறையாண்மையை இலங்கை விட்டுக் கொடுக்காது என்றார் ராஜபக்சே. ஜெனிவாவில் மார்ச் மாதம் நடைபெறும் ஐநா மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் கொண்டு வரப்படும் தீர்மானம் உரிமை மீறல்களுக்கு இலங்கை பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துவதாக இருக்கும் என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் நோக்கம் போர்க்குற்றப் புகார்களுக்கு தீர்வு காண கொழும்பு புதிதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவதாகும்.
இதே போன்ற ஐநா தீர்மானங்களை 2012, 2013லும் அமெரிக்கா கொண்டுவந்தது. இவற்றை இந்தியா ஆதரித்தது.போரில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு பொறுப் பேற்குமாறும், தமிழர்களுடன் மீண்டும் நல்லுறவை ஏற்படுத்தி நல்லிணக்க சூழ்நிலையை கொண்டுவருமாறும் இலங்கையை இந்த தீர்மானங்கள் வலியுறுத்து கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது அப்பாவி மக்களுக்கு கொடுமை இழைத்த ராணுவ வீரர்களை இலங்கை தண்டிக்க வேண்டும் என்று ஐநா ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளது.