

போஸ்னியாவைச் சேர்ந்த 16 வயது கெரிம் அஹ்மெட்ஸ்பாஹிக், 35 நொடிகளில் 111 சிமெண்ட் பலகைகளைத் தலையால் உடைத்து கின்னஸ் சாதனை படைத்துவிட்டார்! டைகுவாண்டோ என்ற தற்காப்புக் கலையில் சாம்பியன் பட்டம் வென்ற கெரிம், தன்னுடைய அடுத்த முயற்சியாகத் தலை மூலம் சிமெண்ட் பலகைகளை உடைக்கும் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். 16 வரிசைகளில் வைக்கப்பட்டிருந்த 111 சிமெண்ட் பலகைகளை 35 நொடிகளுக்குள் உடைத்து சாதனை படைத்தார். தனக்கு உதவி செய்த அத்தனை மக்களுக்கும் பயிற்சியாளருக்கும் பெற்றோருக்கும் இந்தச் சாதனையைச் சமர்ப்பிப்பதாகக் கூறினார் கெரிம்.
மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள் கெரிம்!
பிரேசிலின் ககாபாவா டு சட் நகரில் வசிக்கும் வெள்ளை அகிடா வகை நாய் ஹச்சிகோ, கடந்த 9 ஆண்டுகளாகத் தன்னை வளர்த்தவருக்காகக் காத்திருக்கிறது. ஓவியர் க்ளாடியோ கேன்டாரெல்லி ஒரு வருடம் ஹச்சிகோவை வளர்த்துவந்தார். க்ளாடியோவும் ஹச்சிகோவோவும் ஒருவருக்கு ஒருவர் மிக அன்பாகப் பழகிவந்தனர். தினமும் நீண்ட தூரம் நடைப் பயிற்சி மேற்கொள்வார்கள். ஓவியருக்கு நண்பர்களும் ரசிகர்களும் அதிகம். வழியெல்லாம் நலம் விசாரிப்பார்கள். தேநீர்க் கடையில் சிறிது நேரம் அமர்ந்திருப்பார்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, இருவரும் வீடு திரும்புவார்கள். ஒருநாள் க்ளாடியோவுக்கு உடல்நலம் மிக மோசமானது. மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதாகிவிட்டது. க்ளாடியோவின் குடும்பத்தினர் ஹச்சிகோவை நன்றாகப் பார்த்துக்கொண்டாலும் க்ளாடியோவின் அன்புக்காக மிகவும் ஏங்கியது. உடல் நலம் குன்றியது. ஹச்சிகோவின் நிலையைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் சையோனாரா, தான் எடுத்துச் சென்று வளர்ப்பதாகக் கூறினார். உடனே ஹச்சிகோவை அனுப்பி வைத்தனர். மருத்துவமும் நல்ல உணவும் சில மாதங்களில் ஹச்சிகோவின் உடலைத் தேற்றின. தினமும் க்ளாடியோ நடைப் பயிற்சி செல்லும் நேரத்துக்குத் தயாராக நின்றது ஹச்சிகோ. சையோனாராவும் ஹச்சிகோவும் நடக்க ஆரம்பித்தனர். க்ளாடியோ யாரிடமெல்லாம் பேசுவாரோ, அவர்களைக் கண்டதும் வாலை ஆட்டிக்கொண்டு நின்றது. அவர் எந்தெந்தக் கடைகளுக்குச் செல்வாரோ, அங்கெல்லாம் சென்றது. ஒரு சின்ன விஷயத்தைக் கூட மறக்காமல் அத்தனையும் இன்றுவரை செய்துகொண்டேயிருக்கிறது. தன் அன்புக்குரிய க்ளாடியோ சென்ற ஆண்டு மறைந்து போன விஷயம் அறியாத ஹச்சிகோ, இன்னும் அவரைத் தேடிக்கொண்டே இருக்கிறது. ஹச்சிகோவின் கதையை அறிந்த நகரவாசிகளும் கடைக்காரர்களும் தினமும் உணவு, பால், தண்ணீர் கொடுத்து அன்பாக உபசரிக்கிறார்கள். “இப்படி ஒரு அன்பான புத்திசாலியான நினைவுத்திறன் அதிகமுள்ள நாயை நான் கண்டதில்லை. ஒன்பது வருடங்களில் க்ளாடியோ உட்பட எதையும் மறக்கவில்லை ஹச்சிகோ!” என்கிறார் சையோனாரா.
ஹச்சிகோவின் அன்பும் நினைவுத்திறனும் ஆச்சரியமூட்டுகின்றன!