

மத்திய கிழக்கின் 8 நாடுகளில் விமானம் மூலம் அமெரிக்காவுக்கு பயணிக்கும் பயணிகள் மின்னணு பொருட்களை கொண்டு செல்ல அந்நாடு தற்காலிக தடை விதித்துள்ளது.
தடை குறித்து கருத்து கூற அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மேலும் இத்தடை சில வாரங்களுக்கு தொடரும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏபி செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, "அமெரிக்காவிலிருந்து 10 சர்வதேச விமானங்களுக்கு தடையில்லாமல் செல்லும் விமானங்களில் பயணிப்பவர்களுக்கு இந்தத் தடை பொருந்தும்.
இதன்படி, எகிப்தின் கெய்ரோ, ஜோர்டானின் அம்மான், குவைத்தின் குவாத் சிட்டி, மொராக்கோவின் கசபாலான்கா, கத்தாரின் தோகா, சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா, துருக்கியின் இஸ்தான்புல், அபுதாபி மற்றும் துபாய் ஆகிய விமான நிலையங்களுக்கு செல்லும் விமானங்களுக்கு இந்தத் தடை தொடரும்" என்றார்.
மற்றொரு அதிகாரி கூறும்போது, "இந்தத் தடையால் 9 விமான நிறுவனங்கள் பாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட விமான நிலையங்களுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இத்தடை குறித்து திங்கட்கிழமை ராயல் ஜோர்டானிய ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டிருப்பதாக சவுதி அரேபிய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், "மொபைல் போன், மருத்துவ சாதனங்களுக்கு இந்த தடையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க், சிக்காகோ, டெட்ராய்ட் மற்றும் மான்ட்ரியல் நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் இந்தத் தடை நீடிக்கும்" எனக் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து டென்வர் பல்கலைக்கழக பேராசிரியருமான ஜெப்ரே பிரைஸ் கூறும்போது, ‘‘இதேபோல் கடந்த 2006-ல் பிரிட்டன் தடை விதிக்க முயன்றபோது, பயணிகளின் உடைமைகள் அதிக அளவில் திருடு போயின. பேட்டரிகள் கொண்ட சில லேப்டாப்கள் எளிதில் தீப்பற்றக் கூடியவை. அவை விமானத்தில் சரக்கு வைக்கும் இடத்தில் இருந்தால் சுலபமாக கண்டுபிடிக்க முடியாது. தீப்பற்றி எரிவதையும் தடுக்க முடியாது. பயணிகள் கையில் எடுத்துவரும் உடைமைகளில் இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்’’ என்றார்.
அமெரிக்க உளவுத் துறை வெளிநாடுகளில் சேகரித்த தகவலின் அடிப்படையில், பாதுகாப்பு காரணத்தை கருத்தில் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.