

இலங்கையின் வடக்குப் பகுதியான வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் தீப்பந்தம் ஏந்திய போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
'கடத்தப்பட்ட எங்கள் பிள்ளைகள் எங்கே, கொலைகார பூமியில் காமன்வெல்த் மாநாடா, சர்வதேச விசாரணை தேவை , காணாமல் போனவர்கள் பற்றி பதில் சொல், எங்கள் வீடுகளை எம்மிடம் தா, வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு” என பல கோஷங்களை எழுப்பியவாறு தங்கள் உறவுகளை தொலைத்தவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு மற்றும் காணாமல் போனோரை தேடும் உறவுகளின் சங்கம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தீப்பந்த போராட்டம் வவுனியா கந்தசாமி கோவிலில் நடந்தது.
இதில் காணாமல் போனோரின் உறவினர்கள், இன்னமும் தண்டனைக் காலம் முடிந்து சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.