

வடகொரியாவின் 2ம் நிலை தலைவரான வைஸ் மார்ஷல் ஷோ ரியாங் ஹே படத்தை அரசு நாளேடு வெளியிட்டு, அவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு நெருக்கமானவர் என்றும் 2ம் நிலைத் தலைவர் என்றும் கருதப் படுபவர் ஹே. இந்நிலையில் அவர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார் என வதந்தி நிலவி வந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல வடகொரிய ஆளும் உழைப்பாளர் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான தி ரொடாங் சின்மன், விமானப்படை பிரிவு ஒன்றை கிம் பார்வையிட்ட போது ரியாங் ஹேவும் உடன் செல்லும் புகைப் படத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டது. பிப்ரவரி 16ம் தேதியிலிருந்தே பொது நிகழ்ச்சிகளில் ஹேவை பார்க்க முடியவில்லை. நாட்டின் மூத்த தலைவர் ஒருவர் இத்தனை நாள்களாக பொது நிகழ்ச்சிகளில் வராதது அசாதாரண நிகழ்வா கும், எனவே அவர் நீக்கப்பட்டிருக் கலாம் என்ற செய்தி பரவியது.
அதிபர் கிம்மின் நெருங்கிய உறவினரும் அவரது அரசியல் குருவென்றும் கருதப்பட்ட ஜாங் சாங் தேக், திடீரென மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டதைத ்தொடர்ந்து நாட்டின் உயர் அதிகார நிலையில் மாற்றம் வரலாம் என்றும் பேச்சு அடிபட்டது.
அதிகாரப் பொறுப்பிலிருந்து ஷோ நீக்கப்பட்டார் என்ற செய்தி முதலில் தென் கொரிய ஊடகங்களில்தான் வெளியானது. அவரை வட ராணுவ பாதுகாப்பு தலைமையகம் கைது செய்து அடைத்து வைத்துள்ளது என அந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இதற்கிடையில், அதிபருடன் ஷோ இருப்பதுபோல வெளியான புகைப்படத்தைக் கொண்டு, ராணுவம் அவரை கைது செய்ததாக வெளியான செய்தி தவறானது என்ற கருத்துக்கு வந்துவிட முடியாது என்று இணைய தளம் ஒன்று தெரிவித்திருக்கிறது.
கடந்த 3 வாரங்களாக முக்கியமான பொது நிகழ்ச்சிகளில் ஷோ கலந்து கொள்ளாதது , கிம்மின் அதிகார வட்டத்திலிருந்து அவர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது என்றும் அந்த இணையதள செய்தி தெரிவிக்கிறது.