சியாட்டில் நகர்மன்ற உறுப்பினராக இந்தியர் தேர்வு

சியாட்டில் நகர்மன்ற உறுப்பினராக இந்தியர் தேர்வு
Updated on
1 min read

அமெரிக்காவின் சியாட்டில் நகர்மன்ற உறுப்பினராக அமெரிக்க இந்தியர் ஷாமா சாவந்த் (41) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சோஷலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார ஆசிரியையான ஷாமா சாவந்த், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந் தவராவார். மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்ட சியாட்டில் நகர்மன்றத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட ஷாமா சாவந்த், 3,100 வாக்குகள் வித்தியாசத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார்.

ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்ச ஊதியம் 15 அமெரிக்க டாலர் என்ற கோரிக்கையை வென்றெடுப்போம் என்கிற கோஷத்துடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஷாமா சாவந்த் ஈடுபட்டார். வரும் ஜனவரி 1-ம் தேதி நகர்மன்ற உறுப்பினராகப் பதவியேற்க உள்ளார். அவரது வெற்றி குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், “சாவந்திடம், அமெரிக்கா தற்போது சந்தித்து வரும் எந்தப் பிரச்சினைகள் பற்றி கேட்டாலும், அதற்கு தீர்வு சோஷலிசம்தான் என்று கூறுகிறார். சோஷலிச பாதையில் பயணம் செய்தால்தான் உண்மையான ஜனநாயகத்தை கட்டமைக்க முடியும் என்று அவர் நம்புகிறார்” என தெரிவித்துள்ளது.

ஷாமா சாவந்த் கூறுகையில், “எனது 20-வது வயதில் அமெரிக்காவில் குடியேறியபோது, வருவாய் ஈட்டுவதில் மக்களுக்கு இடையேயான ஏற்றத் தாழ்வு மிகவும் அதிகமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்” எனறார். ஆரம்பத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்த சாவந்த், அந்த பணியை ராஜிநாமா செய்துவிட்டு பொருளாதாரம் கற்றார். இப்போது சியாட்டில் மத்திய சமுதாய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in