

உசாகி புயல் சீனாவைத் தாக்கியதில் 25 பேர் இறந்தனர். இதற்கிடையே அந்த புயல் கரையைக் கடந்து வலுவிழந்துள்ளது.
கடந்த சில தினங்களாக பிலிப்பின்ஸ், தைவானை தாக்கிய உசாகி புயல் ஞாயிற்றுக்கிழமை சீனாவின் தென்பகுதியைத் தாக்கியது. இந்தத் தாக்குதல் காரணமாக கனமழை பெய்ததுடன் மணிக்கு 165 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசியது. இத் தாக்குதலுக்கு குவாங்டாங் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.புயல் காரணமாக 35.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22.6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 7,100 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 52.95 கோடி டாலர் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குவாங்டாங் மாகாணத்தில் புயல் தாக்குதல் காரணமாக, 25 பேர் இறந்ததாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். குவாங்சூ, ஷென்ஜென், ஜுஹாய், ஹாங்காங் மற்றும் மகாவ் ஆகிய நகரங்களில், ரயில், விமானம், கப்பல் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உசாகி புயல் ஞாயிற்றுக்கிழமை மாலை வலுவிழந்துவிட்டதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.