

இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது விவகாரத்தில் இருதரப்பிலும் தவறு உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அதிகாரி பி.ஜே.குரோலி தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராகப் பணியாற்றிய தேவயானி விசா மோசடி வழக்கில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி கைது செய்யப் பட்டார். அவரை பொது இடத்தில் கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடைகளைக் களைந்து சோதனை செய்தது, போதை அடிமைகளுடன் ஒரே அறையில் அடைத்தது ஆகியவற்றுக்காக இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இதுவரை சுமுக தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத் துறை முன்னாள் அதிகாரி பி.ஜே. குரோலி நடு நிலையோடு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
2009 முதல் 2011 வரை அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலாளராக பணியாற்றிய அவர் தற்போது ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராகப் பணியாற்றி வருகிறார். அவர் கூறியிருப்பதாவது:
தேவயானி கோப்ரகடே விவகாரத்தை அமெரிக்காவும் இந்தியாவும் லாவகமாகக் கையாண்டிருக்கலாம். இந்த விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே இப்போது சிறிய விரிசல் ஏற்பட்டுள்ளது. எனினும் இது நீண்ட காலம் நீடிக்காது. விரைவில் சுமுக நிலை திரும்பும்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இரு தரப்பிலுமே தவறுகள் இருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை இந்தச் சூழ்நிலை ஏற்படுவதைத் தடுத்திருக்கலாம். இப்போது நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன என்றார்.