

இராக் மற்றும் சிரியாவில் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ். தீவிரவாத அமைப்பை அழிப்பதற்கு ஆசிய நாடுகள் உதவ வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காகவும், எபோலா வைரஸை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்காகவும் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு ஜான் கெர்ரி நேற்று சென்றார். அந்நாட்டுத் தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, மலேசியா, புருனே, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளை ஜான் கெர்ரி இன்று சந்திக்கவுள்ளார்.
இது தொடர்பாக ஜான் கெர்ரியுடன் இந்தோனேசியாவுக்குச் சென்றுள்ள அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, “ஐ.எஸ். அமைப்பு சார்பில் போரிட வெளிநாடுகளில் இருந்து முஸ்லிம்கள் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்தும் முயற்சியாக இந்த சுற்றுப்பயணத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தோனேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ஐ.எஸ். அமைப்புக்கு நிதி திரட்டுவது, அவர்களுக்கு ஆதரவான பிரச்சாரத்தை முன்னெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோரை இந்நாடுகள் தடுக்க வேண்டும்.” என்றனர்.
உலகில் அதிக முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியா, அதன் அருகில் உள்ள முஸ்லிம் நாடுகளான மலேசியா, புருனே ஆகியவை ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.