

பிரபல ஹாலிவுட் நடிகரும் சமிபத்தில் ஆஸ்கார் விருது பெற்றவருமான லியோனார்டோ டிகாப்ரியோ ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்காக ஆதரவாக நிதி திரட்டும் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார்.
41 வயதான லீயோனார்டோவின் தொண்டு நிறுவனம் ஒன்று மலேசிய ஊழல் மோசடி தொடர்பாக நீதி விசாரணை வழக்கில் சிக்கியுள்ளது. மேலும் லீயோனார்டோ பல படங்களில் தொடர்ந்து ஒப்பந்தம் ஆகியுள்ளதால் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக நிதி திரட்டும் முடிவிலிருந்து பின்வாங்கியுள்ளார் என ஹாலிவுட் தரப்பிலிருந்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் இது தொடர்பாக ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “டிகாப்ரியோ தனது ஆவணப் படம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளார் என்பதுதான் உண்மையான காரணம். ஊழல் வழக்குகளால் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக நிதி திரட்டும் முடிவிலிருந்து டிகாப்ரியோ பின் வாங்கினார் என்பதெல்லாம் வெறும் வதந்திகள்” என்றார்.