

ஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான 25 வயது மகோ, தன் காதலரை மணப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். அரசக் குடும்பத்தைச் சேராத ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால், மகோ தன்னுடைய இளவரசி ஸ்தானத்தையும் அரச பதவிகள் அனைத்தையும் துறக்க வேண்டியிருக்கும். டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் மகோ. இவருடன் படித்தவர் கேய் கொமுரோ. தற்போது கடல் சுற்றுலாத் துறையில் பணிபுரிந்து வருகிறார். நீர் விளையாட்டு, வயலின், சமையல் போன்ற கலைகளில் வல்லவர். மகோவும் கொமுரோவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உணவகத்தில் சந்தித்து, வெளிநாட்டில் படிப்பது குறித்துப் பேசினார்கள். அன்று தொடர்ந்த நட்பு, பின்னாட்களில் காதலாக மாறியது. மகோ ஏற்கெனவே தன் குடும்பத்தினரிடம் பேசி, அனுமதி வாங்கிவிட்டார். தற்போது மன்னர் குடும்ப வழக்கப்படி அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை வைத்திருக்கிறார். அனைவரின் அனுமதியும் கிடைத்த பிறகு, திருமணத்தை அங்கீகரித்து, நிச்சயதார்த்தம் போன்று ஒரு விழா நடத்துவார்கள். பின்னர் திருமணத் தேதி குறிக்கப்பட்டு, மிக விமரிசையாகத் திருமணம் நடக்கும். ஆனால் திருமணத்துக்குப் பிறகு தன் கணவரைப் போல மகோவும் சாதாரண பிரஜையாகிவிடுவார்.
ஆணவக் கொலைகாரர்கள் திருந்துவார்களா?
சீனாவின் ஸியான் நகரில் இயங்கி வரும் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் வாங் ஸுபாவோ. தன்னுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் எடை குறைத்தால் பரிசாகப் பணம் வழங்கப்படும் என அறிவித்து, உலகம் முழுவதும் செய்திகளில் இடம்பிடித்து விட்டார். ”எங்கள் நிறுவனத்தில் நான் உட்பட, அனைவரும் இடத்தை விட்டு அசையாமல் மணிக்கணக்கில் வேலைகளில் மூழ்கி விடுகிறோம். கிடைக்கும் உணவுகளைச் சாப்பிடுகிறோம். இதனால் அளவுக்கு அதிகமாக எடை கூடிவிடுகிறது. பல நோய்களுக்கு ஆளாக நேர்கிறது. எடையைக் குறையுங்கள், ஆரோக்கியமாக உண்ணுங்கள் என்று சொன்னால் யாரும் காதில் வாங்கவில்லை. அதனால் குறைக்கும் ஒவ்வொரு கிலோ எடைக்கும் 10 ஆயிரம் ரூபாயைப் பரிசாக அறிவித்தோம். உடனே எல்லோருக்கும் எடை குறைப்பில் ஆர்வம் வந்துவிட்டது. உடற்பயிற்சி செய்கிறார்கள். ஜிம்முக்குச் செல்கிறார்கள். ஆரோக்கியமான உணவுகளுக்கு மாறிவிட்டார்கள். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதில்லை. எந்த நேரமும் எடை குறைப்பில் கவனமாக இருக்கிறார்கள். மார்ச் மாதம் இந்தத் திட்டத்தை ஆரம்பித்தோம். மிக வெற்றிகரமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அவரவர் எடை குறைப்புக்கு ஏற்றார் போல பரிசுப் பணமும் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. ஒரு இளம் பெண் இரண்டே மாதங்களில் 20 கிலோ எடையைக் குறைத்து, 2 லட்சம் ரூபாயைப் பரிசாகப் பெற்றுவிட்டார். எல்லோரின் வாழ்க்கை முறையும் மாறிவிட்டது. ஆரோக்கியமான போட்டி உருவாகிவிட்டது. நானும் கணிசமாக எடை குறைந்துவிட்டேன். அளவுக்கு அதிகமான எடை சீனாவில் பெரும் பிரச்சினையாக மாறிவருகிறது. 2030-ம் ஆண்டுக்குள் நான்கு குழந்தைகளில் ஒருவர் எடை அதிகமாக இருப்பார்” என்கிறார் வாங்.
இந்த யோசனையை எல்லா அலுவலகங்களும் செய்யலாமே!