

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர்.
காபூலுக்கு மேற்கே அமைந்துள்ள ஹெராத் நகரில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகம் பகுதியில் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்களை நோக்கி, அவர்கள் சரமாரியாகச் சுட்டனர். அதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கூறும்போது, இரண்டு கார்களில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து விட்டு, அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் பாதுகாப்புப் படை பதில் தாக்குதல் நடத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த தாலிபான்கள், தற்போது தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் தங்களது தாக்குதலை தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.