

அருணாச்சலப் பிரதேசத்தில் 6 இடங்களின் பெயர்களை சீன எழுத்தில் மாற்றுவதற்கு தங்களுக்கு ‘சட்டப்பூர்வ உரிமை’ இருப்பதாக சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் சீன அரசு நாளிதழ், ‘தொடர்ந்து தலாய் லாமாவுக்கு ஆதரவு அளிக்கும் உத்தியை கடைபிடிப்பது இந்தியா அதிக விலை கொடுப்பதில் போய் முடியும்’ என்று எச்சரித்துள்ளது.
சீன அயலுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லு காங் கூறும்போது, “இந்தியா-சீனா கிழக்குப்பகுதி எல்லை விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு வெகு தெளிவானது, சீரானது.
இப்பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் மோம்பா இனக்குழுவினர் மற்றும் திபெத்திய சீனர்களுக்கு தொடர்புடைய வகையில் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த உண்மையை யாரும் மாற்ற முடியாது. எனவே இந்தப் பெயர்களை தரநிலைப்படுத்துவதற்கும் பிரபலப்படுத்துவதற்கும் சட்டபூர்வ உரிமை உள்ள நியாயமான செயலே” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சீன அரசு நாளிதழ் தொடர்ந்து இந்தியா தலாய்லாமாவை துருப்புச் சீட்டாக்கி ‘சிறுபிள்ளைத் தனமாக’ விளையாடினால் அதற்கான பெரிய விலையைக் கொடுக்க வேண்டி வரும் என்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் சீனா பெயர் மாற்றியது குறித்த இந்திய எதிர்வினைகளை ‘அபத்தம்’ என்றும் அது எழுதியுள்ளது.