

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் முக்கிய எரிவாயு உற்பத்தி ஆலைப் பகுதியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுகுறித்து மனித உரிமைகள் இயக்குநரின் சிரியாவுக்கான பிரதிநிதி ரமி அப்தெல் ரஹ்மான் கூறும்போது, “ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள கானெகோ எரிவாயு ஆலைப்பகுதியில் முதல் முறை யாக கூட்டணிப் படை தாக்குதல் நடத்தியது.
இதில் ஆலையின் நுழைவாயில் மற்றும் தொழுகைப் பகுதி சேதம் அடைந்தது. இதில் தீவிரவாதிகள் தரப்பில் உயிர்சேதம் இல்லை. சிலர் காயம் மட்டுமே அடைந்தனர். இந்த ஆலையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை வெளியேற்றும் நோக்கத்துடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது” என்றார்.
இதன் மீதான தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகள் மட்டுமின்றி, அதிபர் பஷார் அல் ஆசாத் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆலை உற்பத்தியை நிறுத்தினால் அதிபர் ஆசாத் மற்றும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் இருளில் மூழ்கும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆலை ஐ.எஸ். கட்டுப் பாட்டின் கீழ் வந்தாலும், அதற்கு முன் அதிபர் ஆசாத்துடன் மற்றொரு போட்டிக்குழுவான அல் நஸ்ரா மற்றும் உள்ளூர் பழங்குடியினர் செய்துகொண்ட உடன்பாடு தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. ஐ.எஸ். பகுதிகளுக்கு எரிவாயு, அதிபர் பகுதிகளுக்கு மின்சாரம் என்பதே இந்த உடன்பாட்டின் முக்கிய அம்சமாகும்.