

ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள பாதிரியார் தாமஸ், தன்னைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவ பாதிரியார் தாமஸ் உழுன்னல். ஏமன் நாட்டின் ஏடன் நகரில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லம் நடத்தப்படுகிறது. அங்கு பாதிரியார் தாமஸ் பணியாற்றி வந்தார்.
கடந்த 2016 மார்ச்சில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முதியோர் இல்லம் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். அங்கிருந்த 4 இந்திய கன்னியாஸ்திரிகள், 2 ஏமன் பெண்கள், 8 முதியோர்களைக் கொலை செய்தனர். பாதிரியார் தாமஸைப் பிணைக்கைதியாக பிடித்துச் சென்றனர்.
தன்னை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பரில் வீடியோ மூலம் அவர் வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் அவர் பேசிய புதிய வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி உள்ளது. அதில், எனது உடல் நிலை மிகவும் மோசமாகி வருகிறது. மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து என்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.