

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத் துக்கு எதிராக, அமெரிக்க நாடாளு மன்றத்தின் ஆதரவை பெறுவதில் இலங்கை தீவிரம் காட்டி வருகிறது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அடுத்த மாதம் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீர்மானத்துக்கு எதிரான கருத்தை உருவாக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரிகளை இலங்கை அதிபர் மகிந்த ராஜ பக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்கா சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து இலங்கை திரும்பிய பின் லலித் வீரதுங்கா நிருபர்களிடம் கூறியதாவது:
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரி களை சந்தித்து ஆதரவு திரட்டும் எனது பயணம் வெற்றி பெற் றுள்ளது. 30 ஆண்டுகால உள் நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது முதல் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த உண்மை நிலவரத்தை அவர்களிடம் எடுத் துரைத்தேன்.
இலங்கை அரசின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிராக தவறான தோற்றத்தை உரு வாக்கும் பணியில் அங்குள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் கள் ஈடுபட்டுள்ளனர். இதை அவர்கள் தங்கள் முழுநேரப் பணியாக செய்கின்றனர். இதனால் எனது பணி சற்று கடினமாக இருந்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் கடைசி 2 வாரங்களில் மட்டும் கவனம் செலுத்துவது நியாயமற்றது.
போரில் இடம்பெயர்ந்த தமிழர்களை மறு குடியமர்த்தி யது, மறுவாழ்வுப் பணிகள் மூலம் முன்னாள் எல்.டி.டிஇ. உறுப்பினர் களை சமூகத்தில் ஒருங் கிணைத்தது என இலங்கை அரசு வெற்றிகரமாக செயல்படுத்திய பணிகளை அமெரிக்காவிடம் விளக்கியுள்ளோம்.
எல்.டி.டி.இ. உறுப்பினர்கள் 665 பேரும், தமிழர்கள் சுமார் 4 ஆயிரம் பேரும் சிவில் பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை நல்லிணக்க ஆணையத்தின் 30 சதவீத பரிந்துரைகளை செயல் படுத்தியுள்ளோம். எஞ்சிய பரிந்துரைகளை செயல்படுத்த உறுதியான நவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன” என்றார் அவர்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானத்தை அமெரிக்கா வரும் மார்ச் மாதம் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் முந்தைய 2 தீர்மானங்களுக்கு இந்தியா சில திருத்தங்களுக்குப் பின் ஆதரவு அளித்தது.
இந்நிலையில் 3-வது தீர்மானம், 2009ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான, சர்வதேச விசாரணை கோரி தாக்கல் செய்யப்படுமோ என இலங்கை அச்சப்படுகிறது.