Published : 07 May 2017 01:42 PM
Last Updated : 07 May 2017 01:42 PM

உலக மசாலா: நிஜ எல்ஃப்

நிஜ எல்ஃப்!

அர்ஜெண்டினாவைச் சேர்ந்த 25 வயது லூயி பட்ரன் தன்னை எல்ஃப் (elf) போன்று மாற்றிக்கொள்வதற்காக அறுவை சிகிச்சைகளைச் செய்து வருகிறார். இதுவரை 21 லட்சம் ரூபாய்க்கு உதடுகள், மூக்கு, கண்கள் போன்றவற்றை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிக்கொண்டிருக்கிறார். க்ரீம்களுக்கும் முடி சாயத்துக்கும் மாதம் 3 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்.

“சின்ன வயதிலிருந்து பிறரின் கிண்டலுக்கு உள்ளாகி வந்தேன். அந்த வலி என்னைத் தனிமைப்படுத்தியது. மற்ற வர்கள் என்னைக் கண்டு கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் என் உருவத்தை மாற்ற 14 வயதில் முடிவு செய்தேன். 18 வயதில் முதல் அறுவை சிகிச்சையைச் செய்துகொண்டேன். எந்தச் சிகிச்சைக்கும் நான் மயக்க மருந்தைப் பயன்படுத்திக்கொள்வதில்லை. வலியை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

கண் நிறத்தை மாற்றுவதற்குத்தான் மிகவும் கஷ்டப்பட்டேன். இன்னும் என்னை முழுமையாக மாற்றிக்கொள்ளவில்லை. நீண்ட கூர்மையான காதுகள், கூர்மையான தாடை, இன்னும் சற்று உயரம் என்று எதிர்காலத் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. திருநங்கைகள் தங்களுக்குள் பெண்மையை உணர்வது போன்றே நான் என் மனதுக்குள் ஒரு எல்ஃப் போலவே உணர்கிறேன். அதனால் எல்ஃப் மாதிரியே உருவத்தை மாற்றி வாழ வேண்டும் என்ற தீராத ஆர்வம் இருந்துகொண்டே இருக்கிறது. அதற்காகத்தான் இத்தனை வலிகளும் செலவுகளும்” என்கிறார் லூயி பர்டன்.

பாலுக்கு இனி மாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை!

மாடுகளிலிருந்து பால் பெற வேண்டிய கட்டாயம் இன்னும் அதிகக் காலம் நீடித்திருக்காது என்கிறார்கள் ரியான் பாண்டியாவும் பெருமாள் காந்தியும். 3 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்டனிலும் நியூயார்க்கிலும் வசித்து வந்த இந்த இளம் விஞ்ஞானிகள் இணைந்து, மாட்டுப் பாலுக்கு மாற்றாகச் செயற்கைப் பாலை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

வீகன் உணவுக்காரர்கள் ஏற்கெனவே மாட்டின் பாலுக்குப் பதிலாக சோயா பால், பாதாம் பால் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவை மாட்டுப் பால் போன்று சுவையாக இருப்பதில்லை. “நாங்கள் இருவரும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள் மாட்டுப் பாலுக்கு இணையான பாதுகாப்பான ஒரு பாலை உருவாக்க வேண்டும் என்று திட்டமிட்டோம். தாவரக் கொழுப்பு, விட்டமின்கள், கனிமங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி லாக்டோஸ் இல்லாத பாலை உருவாக்கினோம்.

இந்தப் பால் அசல் பாலைப் போலவே சுவையாக இருந்தது. மாட்டுப் பாலை விட அதிக சத்துகளும் நிறைந்திருந்தது. ’பர்ஃபக்ட் டே’ என்று எங்கள் பாலுக்குப் பெயரிட்டோம். எங்கள் கண்டுபிடிப்பு மாடுகளுக்கும் நன்மை செய்கிறது, சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்கிறது. லாக்டோஸ், கொழுப்பு, நுண்ணுயிர்க்கொல்லி, ஊக்கமருந்து போன்ற பிரச்சினைகள் எங்கள் பாலில் கிடையாது.

நாங்கள் இந்தப் பாலை உருவாக்கும்போது வியாபார ரீதியாகக் கொண்டு வரவேண்டும் என்று திட்டமிடவில்லை. ஆனால் எங்கள் பாலைச் சுவைத்தவர்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். பாலாடைக் கட்டி, தயிர், ஐஸ்க்ரீம் போன்றவற்றுக்கு மாட்டின் பாலைத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கைப் பாலை விற்பனைக்குக் கொண்டு வந்துவிடுவோம்” என்கிறார்கள் ரியானும் பெருமாளும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x