

இந்தியா தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒருபோதும் தயங்காது என்று அமெரிக்கவாழ் இந்தியர்களிடம் மோடி உரையாற்றினார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து இந்தியா - அமெரிக்கா உறவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் அமெரிக்காவாழ் இந்தியர்களிடம் மோடி உரையாற்றினர்.
அதில் மோடி பேசியதாவது, "இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் நலனே முக்கியமானது. நாட்டின் நலனை பாதுகாக்க உறுதியான நிலைப்பாட்டை எடுக்க இந்தியா ஒருபோதும் தயங்காது.
இதற்கு இந்தியா நடத்திய துல்லியத் தாக்குதலை உதாரணமாக கூறலாம். ( மோடி பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடவில்லை). இந்த விவகாரத்தில் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்ட நாட்டை தவிர பிற நாடுகள் எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை. இது தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
எனது ஆட்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் அனைத்தும் மாற்றமடைந்துள்ளன. வளர்ச்சியடைந்த இந்தியாவைப் பற்றிய அமெரிக்க வாழ் இந்தியர்களின் கனவு நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தைவிட எனது ஆட்சிக்காலத்தில் ஏராளமான சாலைகளும், ரயில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே சரியான இடத்தில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது.
புதிய இந்தியாவை பொறுத்தவரை இளைஞர்களே அதன் வெற்றி. இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அவர்களே மிகப்பெரிய பலம். எப்போது அவர்களின் நம்பிக்கைகளுக்கு சரியான தலைவர்கள் கிடைக்கிறார்களோ, அதுவே அவர்களை சாதனையடையச் செய்கிறது. நாங்கள் மக்களின் நம்பிக்கைகளுக்காக எங்களது கொள்கைகளை தக்க வைத்து கொள்கிறோம்.
கடந்த மூன்று வருடங்களில் உலகில் எந்த மூலையிலுள்ள இந்தியர்கள் துன்பப்பட்டாலும் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதில் இந்திய வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது.கடந்த 3 ஆண்டுகளில் உலகில் பல்வேறு இடங்களில் சிக்கிய சுமார் 80,000 பேரை இந்திய வெளியுரவுத் தூதரகம் மீட்டுள்ளது. மேலும் உலகிலுள்ள இந்தியர்கள் அனைவரும் தங்களுக்கு இந்திய தூதரகம் உதவும் என்று நன்கு உணர்ந்துள்ளனர்" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வாரஜை மோடி வெகுமாக பாராட்டிப் பேசினார்.