

அமெரிக்காவில் இந்திய பொறியாளர் ஸ்ரீநிவாஸைக் கொலை செய்த அமெரிக்க கடற்படை வீரர் ஆடம் பூரிண்டன் (51) மீது இனவெறி குற்றம் மற்றும் துப்பாக்கியால் சுட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரத்தில் ஒலாத்தேவில் இனவெறி காரணமாக பிப்ரவரி 22-ம் தேதி இந்திய பொறியாளர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்ரீனிவாஸைக் கொன்ற ஆடம் பூரிண்டன், மற்றொரு இந்தியர் மதசாணியை துப்பாக்கியால் சுட்டதில் அவர் காயமடைந்தார். இரு இந்திய இளைஞர்களையும் காப்பாற்ற முயன்ற கிரிலாட் என்னும் அமெரிக்கரும் படுகாயமடைந்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பூரிண்டன், ''எங்கள் நாட்டை விட்டு வெளியேறு'' என்று கத்தியபடியே சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு, ஜான்சன் கவுன்டி சிறையில் பூரிண்டன் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி விசாரணை நடத்தினார். இதுகுறித்து அரசு வழக்கறிஞர் ஸ்டீவ் பின்னர் நிருபர்களிடம் கூறியபோது, ஆடமுக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவித்தார்.
இனவெறி தாக்குதலில் ஆடம் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்களை எப்.பி.ஐ. போலீஸார் திரட்டி வருகின்றனர். இது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனையோ உச்ச பட்சமாக மரண தண்டனையோ விதிக்கப்படலாம் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.