லால் மசூதி மீதான தாக்குதலுக்கு நான் உத்தரவிடவில்லை - முஷாரப் மறுப்பு

லால் மசூதி மீதான தாக்குதலுக்கு நான் உத்தரவிடவில்லை - முஷாரப் மறுப்பு
Updated on
2 min read

இஸ்லாமாபாதில் 2007ல் நிகழ்ந்த லால் மசூதி தாக்குதல் சம்பவத்துக்கு நான் ஆணை எதுவும் பிறப்பிக்கவில்லை என்று மறுத்துள்ளார் அப்போதைய ராணுவ ஆட்சியாளரும் அதிபருமான பர்வேஸ் முஷாரப்.

இதனிடையே, அவர்மீது தெய்வநிந்தனை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி இஸ்லாமாபாதில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் புதிதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிவப்பு மசூதி என்கிற வேறு பெயரும் உடைய லால் மசூதி மீது 2007ம் ஆண்டில் பாதுகாப்புப் படையினர் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் அந்த மசூதியின் துணை நிர்வாகி அப்துல் ரஷீத் காஸி என்பவர் உள்ளிட்ட ஏராளமானோர் உயிரிழந்தனர்.

இது பற்றி விசாரிக்க 3 உறுப்பினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. லால் மசூதி சம்பவம் பற்றி போலீஸில் புகார் செய்த அப்துல் ரஷீத் காஸியின் மகன் ஹரூண் ரஷீத், இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டது அப்போதைய அதிபர் முஷாரப் என்றும் இந்த சம்பவத்தில் தனது தந்தையும் பாட்டியும் உயிரிழந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மீது முஷாரபிடம், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள சாக் ஷாஜத் பண்ணை வீட்டுக்குச் சென்று கூட்டு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.

லால் மசூதி தாக்குதலுக்கு நான் உத்தரவு பிறப்பிக்கவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் உத்தரவுக்கு ஏற்ப இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விசாரணைக் குழுவிடம் முஷாரப் தெரிவித்ததாக முக்கிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ‘டான்’ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

லால் மசூதிமீது தாக்குதல் நடத்த நான் எழுத்து மூலமாக உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுவது உண்மையல்ல. தவறாக என்னை இதில் சம்பந்தப்படுத்தியுள்ளனர் என்று முஷாரப் தெரிவித்ததாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராணுவத்தை உதவிக்கு அனுப்பும்படி இஸ்லாமாபாத் நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி ராணுவம் சென்றது. அதைத் தொடர்ந்து மசூதிக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் எனது பங்கு ஏதும் இல்லை.

எனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையில் உள்ள புகார்கள் அனைத்தையும் நான் மறுக்கிறேன் என்றும் முஷாரப் தெரிவித்துள்ளார்.

2007ம் ஆண்டு லால் மசூதிக்குள் ராணுவம் புகுந்து நடத்திய தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் உள்பட 100 கொல்லப்பட்டனர்.

தாக்குதலின்போது புனித நூல்களுக்கு அவமதிப்பு

லால் மசூதி தாக்குதல் சம்பவத்தின்போது புனித நூல்கள் அவமதிப்புக்குள்ளாகின. குரான், மத நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் பெருமளவில் அழிக்கப்பட்டன. இதற்காக முஷாரப் மீது இறை நிந்தனை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வழக்குரைஞர் தாரிக் ஆசாத் என்பவர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த தாக்குதல் நடைபெற முஷாரப்தான் காரணம், இஸ்லாமிய கல்வி அறிஞர்கள், மத போதகர்கள், ஆசிரியர்களை கொல்வது, இஸ்லாமிய பிரசாரப்பணிகளை முடக்குவதுமே தாக்குதலின் நோக்கம். இது இறை நிந்தனை குற்றமாகும் என்றும் ஆசாத் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஷுகாதா அறக்கட்டளை சார்பில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் ஆசாத்.

எனினும், லால் மசூதி மீதான நடவடிக்கை அரசு தரப்பில் எடுக்கப்பட்டது என்பதால் அதை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாது என மூத்த வழக்குரைஞர் அகமது ராஸா கசூரி என்பவர் டான் பத்திரிகைகக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சி மேற்கொண்டு அதில் தோல்வியுற்ற முஷாரப் பதவி இழந்து வெளிநாட்டுக்கு வெளியேறினார். அதன்பின்னர் 2008ல் தேர்தலில் போட்டியிட நாடு திரும்பியதும், பேநசீர் புட்டோ கொலை வழக்கு உள்ளிட்டவற்றில் குற்றம் சாட்டப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in