

பாகிஸ்தானின் சிறுமி மலாலாவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தாலிபான் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மலாலாவை "நம்பிக்கையில்லாதவர்களின் தரகர்" என்றும் விமர்சித்துள்ளது.
தெஹ்ரீக் இ தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தா ஜமாத் உல் அஹ்ரார் என்ற தாலிபான் இயக்கம், தனது ட்விட்டர் பக்கத்தில் இதைப் பகிர்ந்துள்ளது. மேலும், நம்பிக்கையில்லாதவர்கள் மலாலாவை பொய்ப் பிரகடனம் செய்ய பயன்படுத்துகிறார்கள் என்றும் அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
"மலாலா வன்முறைக்கு எதிராகவும், ஆயுதங்கள் ஏந்துவதற்கு எதிராகவும் நிறையப் பேசி வருகிறார். ஆனால் நோபல் பரிசின் நிறுவனர்தான் வெடிப்பொருட்களை கண்டுபிடித்தவர் என்பது அவருக்கு தெரியாதா" என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஹ்சானுல்லா எஹ்சான் கூறியுள்ளார்.
பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடியதால், மலாலா யூசுப்சாய், இரண்டு வருடங்கள் முன்பு தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இச்சம்பவம் உலகளவில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்த மலாலா, உலகளவில் பல நாடுகளுக்குச் சென்று பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அவரது சேவையை பாராட்டி அண்மையில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.