தாயே இது தகுமா?

தாயே இது தகுமா?
Updated on
2 min read

தாயில்லாப் பிள்ளை போல் கதறிக்கொண்டிருக்கிறது தாய்லந்து. பிரதம அம்மணி ஷினவத்ராவை வீட்டுக்குப் போகச் சொல்லி நாட்டு மக்கள் போராட ஆரம்பித்து, கிட்டத்தட்ட அது இப்போது உச்சக்கட்ட கலவர காண்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பிரதமராகப்பட்டவர் நேற்றைக்குத் திடீரென்று தலைநகரில் இரண்டு மாத எமர்ஜென்சி அறிவித்திருக்கிறார்.

பாங்காக்கையும் அதனைச் சுற்றியுள்ள சில மாகாணங்களையும் இந்த அறுபது நாள்களுக்கு ராணுவமும் போலிஸும் ஆளும். தேவைப்பட்டால் எங்கும் எப்போதும் ஊரடங்கு உத்தரவு. கலவரமானால் துப்பாக்கிச் சூடு, கண்ணீர்ப்புகை. யாரையும் எப்போதும் எதற்கும் கைது செய்யலாம்.

எல்லாம் ஒரு பாதுகாப்புக்கு. அன்பான பெருங்குடி மக்களே, பிப்ரவரி ரெண்டாந்தேதி நான் பொதுத்தேர்தல் வைத்துவிடுகிறேன். அதுவரை சற்று அமைதி காப்பீர்களானால் உங்களுக்கு சர்வ மங்களமும் சேரும் என்று அம்மணி கதறித் தீர்த்துப் பார்த்துவிட்டார். யாரும் கேட்கத் தயாராயில்லை.

இந்த 'யாரும்' என்பதில்தான் சில உள்விஷயங்கள் உள்ளன.

தாய்லந்து பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் மட்டும் கொடி பிடித்து எதிரே நிற்கவில்லை. எந்த ராணுவத்தை நம்பி அவர் இன்றைக்கு எமர்ஜென்சி அறிவித்திருக்கிறாரோ, அந்த ராணுவமே அவருக்கு எதிராகத்தான் திரும்பி நிற்கிறது. அம்மணிக்கு இது தெரியாததல்ல. அதனால்தான் நெருக்கடி நிலைப் பிரகடனத்தில் ஒரு நட்சத்திரக் குறி போட்டு கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி, ராணுவம் ஒன்றும் செய்யாது, காவல் துறைதான் இதனை நடைமுறைப் படுத்தும் என்றும் சொல்லியிருக்கிறார்.

சரி, காவலர் கோமகன்களாவது பிரதமரின் விசுவாசிகளா என்றால் அதிலும் பாதித் தலையைத்தான் ஆட்டவேண்டியிருக்கிறது. எந்தக் கணத்தில் யார் வேண்டுமானாலும் காலை வாரலாம் என்று தெரிந்தேதான் பிரதமர் ஒண்டிக்கு ஒண்டி ஆடிக்கொண்டிருக்கிறார்.

பிரச்னை, அவரிடமல்ல. அவரது சொந்தச் சகோதரர் ஒருத்தரிடம் உள்ளது. தங்கைக்கோர் கீதம் பாடிய அந்த அண்ணன் தக்ஸின் ஷினவத்ரா வெளி தேசத்தில் உட்கார்ந்துகொண்டு இங்கே தங்கத் தங்கையைத் தன் ரிமோட்டில் ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறார்.

இதுவரை கட்டுண்டோம், இனி பொறுப்பதற்கில்லை தம்பி எரிதழல் கொண்டு வா என்று மகா ஜனங்கள் சீறத் தொடங்கிய பிறகுதான் அம்மணிக்கு இதன் தீவிரமே உறைத்திருக்கிறது. என்ன இப்போது? ஆட்சி மாற்றம்தானே உங்களுக்கு வேண்டும்? நான் எலக்‌ஷன் வைக்கிறேன். அதுவரைக்கும் அமைதி காப்பீர் என்கிறார். எலக்‌ஷனெல்லாம் நாங்கள் வைத்துக்கொள்கிறோம், நீ முதலில் மூட்டையைக் கட்டு என்கிறது எதிர்த்தரப்பு. முடியவே முடியாது என்று அழிச்சாட்டியம் பண்ணிக்கொண்டு நாளொரு கலவரம் பொழுதொரு கலாட்டாவுக்கு காரணதாரியாக இருக்கிறார் பிரதமர்.

தாய்லந்தின் இந்த அரசியல் நெருக்கடி, அத்தேசத்தின் சுற்றுலா மற்றும் இதரத் தொழிலினங்களைக் கணிசமாக பாதித்திருக்கிறது. ஏற்கெனவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் நிலையில் தேர்தல் என்ற ஒன்று நடந்தால் மட்டுமே அடுத்த ஆட்சி, அவலத் துடைப்பு என்று என்னவாவது நடக்கும். இந்தம்மா இன்னும் அதிகாரத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருக்கும் பட்சத்தில் தேர்தலுக்கான சாத்தியமே இல்லாது போய்விடும் என்பதே மக்களின் பயம்.

தேர்தலில்லாமல் ஒரு தேர்ந்தெடுத்த நபர்களைக் கொண்ட குழுவின் பொறுப்பில் தேசத்தை விட்டு, உடனடியாக அந்தக் குழு தேர்தலுக்கு ஏற்பாடு செய்து அடுத்த ஆட்சியை நிறுவவேண்டும் என்பதே எதிர்ப்பாளர்களின் கோரிக்கை மற்றும் செயல்திட்டம்.

விட்டேனா பார் என்றுதான் இப்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் நாளை முதல் புரட்சி இன்னும் சூடு பிடிக்கத்தான் செய்யுமே தவிர ஆறும் சாத்தியம் அரை அவுன்ஸ் கூட இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in