Published : 13 May 2017 10:00 AM
Last Updated : 13 May 2017 10:00 AM

இலங்கை மலையக மக்களுக்கு 10,000 வீடுகள்; கொழும்பு - வாரணாசி இடையே நேரடி விமான சேவை- பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இலங்கை மலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும், கொழும்பு- வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

உலகம் முழுவதும் வாழும் பவுத்த மதத்தினர் கவுதம புத்தர் பிறந்த நாளை கடந்த 10-ம் தேதி கொண்டாடினர். இதையொட்டி ஐ.நா. சபை சார்பில் இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றுமுன்தினம் கொழும்பு சென்றார்.

கொழும்பில் நேற்று காலை தொடங்கிய 14-வது சர்வதேச விசாக மாநாட்டுக்கு மோடி தலைமை தாங்கினார். இதில் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் மோடி பேசியதாவது:

இந்தியாவுக்கும் இலங்கைக் கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதாக பவுத்த மதம் உள்ளது. இரு நாட்டு உறவு நூற்றாண்டுகளைக் கடந்ததாகும். வன்முறைகளை தவிர்த்து சமாதானம், அன்பை மட்டுமே பவுத்தம் போதிக்கிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக் கும் இடையிலான நல்லுறவு மேலும் வலுப்படுத்தப்படும். கல்வி, வர்த்தகம், விவசாயம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். கொழும்பு-வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் இந்திய அரசின் நிதியுதவியுடன் நவீன வசதிகளுடன் மலையகத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இதைத் தொடர்ந்து அங்கு நோர்வூட் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

உங்களது மூதாதையர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்தனர். இந்த நேரத்தில் தமிழறிஞர் கனியன் பூங்குன்றனார் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்; என்ற பாடல் வரிகளை நினைவு கூர்கிறேன். ஒவ்வொரு ஊரும் உங்களது ஊரே, இலங்கையும் உங்களது ஊரே. மலையக தமிழர்கள் அனைவரும் தமிழ்த் தாயின் தவப்புதல்வர்கள்.

இலங்கையின் கண்டியைச் சேர்ந்த நாயக்க அரச பரம்பரையினர் மதுரை மற்றும் தஞ்சாவூர் நாயக்க மன்னர்களிடம் பெண் கொடுத்து, பெண் எடுத்துள்ளனர்.

மலையகத் தமிழர்களுக்காக இந்திய அரசு தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படு கிறது. அவர்களுக்காக மேலும் 10 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மலையக மக் களின் கல்வி, சமூக, பொருளா தார வளர்ச்சிக்காக இலங்கை அரசு முன்னெடுக்கும் திட்டங் களுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும். இந்திய அரசால் வழங் கப்பட்டுள்ள 1990 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இலங்கை முழுவதும் விரிவு படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு புத்தரின் புனித தந்தத்தாதுவை வணங்குவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது பலத்த மழை பெய்தது. இருப்பினும் குடையை பிடித்தபடி பிரதமர் மோடியும் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவும் சென்றனர்.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை கொழும்பில் இருந்து விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பினார். முன்னதாக விமான நிலையத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை மோடி சந்தித்துப் பேசினார்.

தேயிலையுடன் தொடர்பு

பிரதமர் நரேந்திர மோடி தனது சிறுவயதில் குஜராத்தின் வத்நகர் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றார். அதை அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது அடிக்கடி குறிப்பிடுவது வழக்கம்.

மலையக தமிழர்களிடம் பேசிய பிரதமர் மோடி, தேயிலை தொழிலில் இலங்கை வளர்ச்சி அடைந்திருப்பதற்கு நீங்கள் முதுகெலும்பாக இருந்துள்ளீர்கள். உங்களுக்கும் எனக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உள்ளது. அதாவது உங்களுக்கும் தேயிலைக்கும் உறவு இருப்பதுபோல எனக்கும் தேயிலைக்கும் தனிப்பட்ட உறவு இருக்கிறது என்று தெரிவித்தார்.

தேசிய தலைவர் எம்ஜிஆர்

மலையக தமிழர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியபோது, தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை நினைவுகூர்ந்தார். அவர் கூறியபோது, எம்ஜிஆர் இலங்கை மண்ணைச் சேர்ந்தவர். அவர் இந்தியாவின் தேசிய தலைவராக விளங்கியவர் என்று குறிப்பிட்டார்.

இதேபோல இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். உலகில் இதுவரை உருவாகிய மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் முத்தையா முரளிதரன். மலையக மக்கள் அளித்த மிகச் சிறந்த பரிசுகளில் அவர் ஒருவர் என்று மோடி கூறினார்.

திருக்குறள் வாசித்த மோடி

மலையக தமிழர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ பாடலை தமிழில் வாசித்தார். இதேபோல தனது உரையின் நிறைவாக ‘ஆக்கம் அதர்வினாய் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை’ என்ற திருக்குறளையும் தமிழில் வாசித்து அசத்தினார்.

சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்துக்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும். அதுபோல மலையக தமிழர்கள் ஊக்கத்துடன் உழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x