Published : 21 Feb 2014 10:37 AM
Last Updated : 21 Feb 2014 10:37 AM

இந்தியா-சீனா பொருளாதார மேம்பாட்டுக்கு நல்லுறவு அவசியம்: புத்த மதத் தலைவர் தலாய் லாமா வலியுறுத்தல்

நம்பகத்தன்மை அடிப்படையில் நல்லுறவை ஏற்படுத்திக்கொள்வதே சீனா, இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு இன்றியமையாதது என்று திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா வலியுறுத்தியுள்ளார்.

இரு வார பயணமாக நியூயார்க் வந்துள்ள அவர் டைம் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இந்தியாவும் சீனாவும் போட்டி, மோதலில் ஈடுபடுவது ஆசியாவுக்கும் நல்லதல்ல, திபெத்தின் லட்சியத்துக்கும் நல்லதல்ல. இந்த இரு அண்டை நாடுகளுக்கும் இடையில் நம்பகத்தன்மை அடிப்படையில் நல்லுறவு மலர வேண்டும். அதுதான் பொருளாதார மேம்பாட்டுக்கு நல்ல பங்களிப்பு தரும். கல்வி,ஆன்மிகம் ஊக்கம் பெறும். எனவே இரு நாடுகளும் ஒன்றையொன்று நம்பும் நிலை மையை உருவாக்கி நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

சீன புதிய அதிபர்

சீனாவின் புதிய அதிபர் ஜி ஜின்பிங் பற்றி தலாய் லாமா கூறியதாவது: சீன புதிய அதிபர் நாட்டில் மலிந்துள்ள ஊழலை ஒடுக்க துணிச்சலுடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. ஆனால் சீன சமூகத்தில் ஊறிவிட்ட தணிக்கை என்பது வேதனை தருவதாக இருக்கிறது.

சீனத்து கிராமப் பகுதிகளில் உண்மையான மேம்பாடு ஏற்படவேண்டும். புதிது புதிதாக பெரிய நகரங்களை அமைப்பதால் என்ன தீர்வு கிடைத்து விடப்போகிறது. நாட்டில் என்ன தான் நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை 130 கோடி மக்கள் ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது.

சீனாவின் நீதி வழங்கல் அமைப்பை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தினால்தான் நாட்டில் ஏழைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும். சீனாவின் மனித உரிமை பிரச்சினைகளில் அமெரிக்கா பாராமுகமாக இருப்பதாக நான் கருதவில்லை. சுதந்திரம், ஜனநாயகம், நீதி இதுதான் அமெரிக்காவின் கோட்பாடுகள். சிலருக்கு பொருளாதாரம் தான் பிரதானமாகும். அது தவறானதாகும்.

அறநெறிகள் இல்லாமல் போனால் மனித வாழ்க்கையே மதிப்பிழந்து விடுகிறது. அற நெறிகளும் வாய்மையும் உயிர் மூச்சு போன்றது. அவற்றை இழந்தால் எதிர்காலமே கிடையாது. சூழலியல் மீது அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டும். அந்நாட்டின் கிழக்கு கடற்கரை யோரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு காணப்படும் பனிப்பொழிவு இதைத்தான் எச்சரிக்கிறது.

இங்கிலாந்து, இந்தியாவிலும் பருவநிலையில் மாற்றம் காணப் படுகிறது. வட துருவத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு பனி உருகுவதே பருவநிலை மாற்றத் துக்கு காரணம் என்பது அறிவியல் அறிஞர்கள் சிலரது சந்தேகம். எனவே அவர்கள் எச்சரிப்பதை கவனத்தில் கொள்வது நல்லதாகும் என்றார் தலாய் லாமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x