

இராக்கின் மொசூல் நகரில் ஆயிரக்கணக்கான மாணவர்களை தேர்வு எழுதச் செல்ல அனுமதிக்காமல் ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மிரட்டி வருகின்றனர். இதனால் மொசூல் நகரில் வசிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள், சன்னி பிரிவுக்கு ஆதரவான தலைமை கொண்ட 'காலிபத்' என்ற தனி இஸ்லாமிய நாடு அமைப்பதற்காக உள்நாட்டு போரில் ஈடுப்பட்டு வருகின்றனர். இராக்கின் நினிவே மாகாணத்தின் தலைநகரமும் இராக்கின் மிகப் பெரிய நகரமுமான மொசூலை சுற்றி கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி, அங்கு உள்ள மக்கள் அனைவரும் இஸ்லாமிய கொள்கைகள் அடிப்படையிலேயே செயல்பட வேண்டும் என்று கட்டளையிட்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களும் இஸ்லாமியக் கொள்கைகளை தழுவிய மறுசீரமைப்பு பாடத் திட்டத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் மொசூல் நகரில் இருக்கும் 6 முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களை தேர்வு எழுதச் செல்ல அனுமதி மறுத்துள்ளது. காலிபத்திலிருந்து வெளியேறி சென்று தேர்வு எழுத நினைத்து விதிகளை தகர்த்தால் மரண தண்டனை நிச்சயம் என்று ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து நினிவே மாகாண உயர் பாதுகாப்பு அதிகாரி இப்ராகிம் முகமத் அல் பயாத்தி கூறும்போது, "ஐ.எஸ். ஆதரவாளர்கள் இங்கு சுற்றிலும் மையங்களை ஏற்படுத்தி மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். இங்கிருந்து கிர்க்குக்கு என்ற இடத்துக்கு சென்றுதான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். ஆனால், மாணவர்கள் செல்ல வாய்ப்பே இல்லாத நிலை உள்ளது" என்றார்.
கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தலால் மாணவர்கள் தங்களது பள்ளிக்கு செல்லாமல் எந்த மாகாணத்துக்கு சென்று தேர்வு எழுதினாலும், அவர்களது தேர்வு மதிப்பிடப்படும் என்று இராக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் அரசு அறிவித்தது போல அருகில் உள்ள பகுதிகளிலும் மாணவர்களால் சென்று தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கண்ணில் சிக்கிய மாணவர்கள் கடுமையான எச்சரிக்கையோடு நகருக்குள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனை மீறி சென்றால், கைது செய்யப்பட்டு மரண தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை வருவதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து மொசூலை சேர்ந்த மாணவர் மைசூன் முகமது கூறுகையில், "கிளர்ச்சியாளர்கள் எங்களது கனவை நாசமாக்கின்றனர். ஏற்கெனவே நாங்கள் தாக்குதல் சத்தத்துக்கு நடுவே பாடங்களை படித்து மன உளைச்சலில் உள்ளோம். எங்களது பள்ளி பருவம் பாழானது. ஜூன் 10-ஆம் தேதியிலிருந்தே எங்களால் படிக்க முடியவில்லை. இப்போது படிக்க முடியும் என்ற நம்பிக்கையும் போனது" என்று கூறினார்.