

அமெரிக்காவின் வடக்குப் பகுதி யில் அமெரிக்கா வாழ் இந்தியர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களின் தேவை யைக் கருத்தில் கொண்டு 6-வது துணை தூதரகத்தை சியாட்டிலில் விரைவில் அமைக்கவுள்ளது இந்தியா.
இதுதொடர்பாக அதிபர் ஒபாமா, பிரதமர் மோடி இடை யிலான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் கூறும் போது, “சியாட்டிலில் புதிய துணை தூதரகத்தைத் திறப்போம் என நம்புகிறோம்” எனத் தெரிவித் துள்ளார்.
இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப் பட்ட கூட்டறிக்கையிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் இந்தியத் தூதரகம் அமைந்துள்ளது. இது தவிர, நியூயார்க், சான் பிரான்ஸிஸ் கோ, சிகாகோ, ஹூஸ்டன், அட்லாண்டா ஆகிய பகுதிகளில் துணைத் தூதரகங்கள் உள்ளன.
2017-ம் ஆண்டில் இந்தியாவும் அமெரிக்காவும் பயணம் மற்றும் சுற்றுலா கூட்டாளி நாடுகளாக இருக்கும். இதைத்தொடர்ந்து இரு நாட்டவர்களுக்கும் விசா உள்ளிட்ட வசதிகளை அளிப்பதில் உறுதிப்பாடு கொண்டுள்ளன என கூட்டறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் தூதரக அளவி லான திட்டங்களை அதிகரிக்க கூடுதல் விசாக்களை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ள தாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கல்வி மற்றும் கலாச்சார பிணைப்பு இருநாடுகளுக்கும் இடையே வலுப்பெற்றுள்ளது. 2014-15-ம் ஆண்டில் அமெரிக்கா வில் பயிலும் இந்திய மாணவர் களின் எண்ணிக்கை 29 சதவீதம் உயர்ந்து 1,33,000 ஆக இருப்பதை மோடி மற்றும் ஒபாமா வரவேற்றுள்ளனர்.
அமெரிக்க மாணவர்கள் இந்தியாவில் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் எனவும், புல்பிரைட் கலாம் பருவ நிலை உதவித் தொகை மூலம் பருவநிலை விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் எனவும் இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர். நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.