Last Updated : 25 Dec, 2013 10:56 AM

 

Published : 25 Dec 2013 10:56 AM
Last Updated : 25 Dec 2013 10:56 AM

தெற்கே சூலம்

ஒரு வாரத்தில் ஐந்நூறு பேர் மரணம். கிட்டத்தட்ட தேசம் முழுதுமே பதற்றம். எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத நிலைமை. இந்தப் பக்கம் அமெரிக்கா கவலை தெரிவிக்கிறது. அந்தப் பக்கம் ஆப்பிரிக்க தேசங்கள் அத்தனையுமே அதிர்ந்து நிற்கின்றன. எண்ணெய் வளம் கொழிக்கும் தெற்கு சூடானில் ஒரு புரட்சி என்றால் அதற்கு வியாபாரத்தில் எள்ளு என்று பெயர். வருமானத்தில் எள்ளு என்று பெயர். வளர்ச்சியில் எள்ளு என்று பெயர்.

உலகம் சிரியாவையும் பாலஸ்தீனையும் எகிப்தையும் இரானையும் கவனித்துக் கொண்டிருக்கும் ஆண்டின் இறுதி தினங்களில் தெற்கு சூடான் ஒரு கலவர பூமியாகிக்கொண்டிருக்கிறது.

வேறென்ன? புரட்சிதான். அதிபரைத் தூக்கிவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முன்னாள் துணை அதிபர் சில போராளிக் குழுக்களுடன் சேர்ந்து ஒரு முயற்சியில் ஈடுபட்டார் என்பதுதான் இந்தக் காவியத்தின் பாயிர வரி. ஒரே நாளில் வெற்றி கண்ட புரட்சிகள் உண்டு. சில தினங்களைச் சாப்பிட்டு வென்ற புரட்சிகளும் உண்டு. பாதியில் புட்டுக்கொண்ட புரட்சிகள் அநேகம்.

ஆனால் தெற்கு சூடானில் இம்மாதத் தொடக்கத்தில் மப்பும் மந்தாரமுமாக ஆரம்பித்து, போனவாரம் உச்சத்துக்குச் சென்று இன்று உள்நாட்டு யுத்தமாகப் பரிமாணம் எடுக்கும் நிலையைத் தொட்டிருக்கும் களேபரத்தை மேற்படி எந்த வகையறாவுடனும் சேர்ப்பதற்கில்லை. பச்சையாகச் சொல்வதென்றால் இது பண விளையாட்டு.

தெற்கு சூடான் என்ற தேசமே 2011 ஜூலையில்தான் பிறந்தது. அதற்குமுன் ஒரே சூடான்தான். இப்போது வடக்கு தெற்காகப் பிரிந்திருக்கிறது. மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தி கிட்டத் தட்ட நூறு சத ஆதரவுடன் தெற்கு சூடானியர்கள் தனியே பிரிந்து போனதற்கு ஒரே காரணம், சூடானின் மொத்த எண்ணெய் வருமானத்தின் தொண்ணூறு சதத்துக்கும் மேற்பட்ட பணத்தை தெற்கு சூடான் கிணறுகள் கொடுத்துக்கொண்டிருந்ததுதான்.

அபாரமான எண்ணெய் வளத்தைப் பயன்படுத்தி, தெற்கு சூடானை வெகு விரைவில் ஒரு பெரும்பணக்கார தேசமாக்கிக் காட்டுகிறேன் பேர்வழி என்று பதவிக்கு வந்தவர்களிடையே பர்சனல் பட்டுவாடாக்களில் குடுமிப்பிடிச் சண்டை ஆரம்பித்தது.

அதிபர் சல்வா கிர்ருக்கும் அவரது துணை அதிபராக இருந்த ரீக் மேச் சருக்கும் புகைச்சல் தொடங்கிய தருணம் எது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால் துணை அதிபரை அதிபராகப்பட்டவர் இந்த ஆண்டுத் தொடக்கத்திலிருந்தே தள்ளி வைக்க ஆரம்பித்து வெகு விரைவில் விலக்கியும் வைத்தார்.

விலக்கி வைத்தால் வீட்டுக்குப் போய் ரிடையர்மெண்ட் வாழ்க்கை வாழ்கிற நபரல்ல மேச்சர். தனக்கு சகாயமான ஆதிவாசிக் குழுவினர் சிலரைப் போராளிக் குழுக்களாக்கி, ஆயுதம் கொடுத்து, பணம் கொடுத்து போஷித்து ஒரு புரட்சிக்குத் தயார் செய்து இன்று களத்தில் இறக்கிவிட்டார்.

விளைவு, சூடானிய ராணுவத்துக்கும் துணை அதிபரின் துணை ராணுவத்துக்கும் இடையே சண்டை வெடித்து தேசம் ரணகளமாகிக்கொண்டிருக்கிறது. புரட்சியாளர்கள் சில எண்ணெய்க் கிணறுகளைப் பிடித்து வைத்துக்கொண்டு பெப்பே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம், இது பதவி வேட்டைக்கான வெறியாட்டம் என்பதையே உணராத அப்பாவி ஆதிவாசிகள் இதனை இனக்குழு மோதலாகவே எடுத்துக்கொண்டு சொந்தச் சகோதரர்களைப் போட்டுத்தள்ளத் தொடங்கிவிட்டார்கள். வீதிக்கு வந்தாலே விதியின் வசம் வாழ்க்கை போய்விடும் என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது. எப்போதும் ஊரடங்கு, எப்போதும் குண்டுச் சத்தம், எப்போதும் ராணுவ அணி வகுப்பு என்று தெற்கு சூடான் திக்குத் தெரியாத அச்சத்தில் திக்கித் திணறிக்கொண்டிருக்கிறது.

இத்தனைக்கும் அதிபர் கிர், தனது பழைய பங்காளியுடன் சமரசம் பேசக்கூட கடுதாசி அனுப்பியிருக்கிறார். போரை நிறுத்துங்கள், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று நல்லவிதமாகப் பேசிப் பார்த்திருக்கிறார். இதுவரைக்கும் பதிலில்லை; எனவே பலனும் இல்லை. இந்தப் புரட்சி முழு வீச்சில் உள்நாட்டு யுத்தமாகி எண்ணெய்க் கிணறுகள் சர்வநாசமாகிவிடுமானால், பிறகு தெற்கு சூடான் தனி நாடானதற்கே அர்த்தம் இல்லாது போய்விடும்.

ஒவ்வோர் ஆண்டு இறுதியிலும் இயற்கைதான் என்னவாவது அழிச்சாட்டியம் பண்ணும். இந்த வருஷம் அந்தப் பொறுப்பை உலகெங்கும் புரட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x