Last Updated : 24 Oct, 2014 10:00 AM

 

Published : 24 Oct 2014 10:00 AM
Last Updated : 24 Oct 2014 10:00 AM

கனடா நாடாளுமன்றம் மீது தாக்குதல்: ஒபாமா, மோடி, உலகத் தலைவர்கள் கண்டனம்

கனடா நாடாளுமன்றத்துக்குள் புகுந்த இளைஞர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினார். இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பாதுகாப்புப் படையினர், தாக்குதல் நடத்திய இளைஞரை சுட்டு வீழ்த்தினர்.

கனடா தலைநகர் ஓட்டா வோவின் மையப் பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இதன் அருகில் போர் நினைவுச் சின்னம் உள்ளது. கடந்த 22-ம் தேதி போர் நினைவுச் சின்னத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த இளைஞர், அங்கிருந்த ராணுவ வீரர் நதான் சிரிலியோவை சுட்டு கொன்றார்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத் துக்குள் நுழைந்தார். பிரதான வாசல் பகுதிக்கு வந்த அவர் நாலாபுறமும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். அந்த நேரத்தில் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் நாடாளுமன்றத்தில் இருந்தார். உடனடியாக அவர் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எம்.பி.க்களின் பாதுகாப்புக்காக நாடாளுமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. பாதுகாப்புப் படை வீரர்கள் சாதுரியமாக செயல்பட்டு அந்த இளைஞரை சில நிமிடங்களில் சுட்டு வீழ்த்தினர்.

தாக்குதல் நடத்திய இளைஞர் மைக்கேல் (30) என்பது தெரிய வந்துள்ளது. கனடாவைச் சேர்ந்த அவர் அண்மையில் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். அவர் எதற்காக நாடாளு மன்றத்தை தாக்கினார், அவருக்கும் தீவிரவாத இயக்கங்களும் இடையே தொடர்பிருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கனடா பிரதமர் எச்சரிக்கை

இச்சம்பவம் குறித்து கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் கூறியபோது, நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் காட்டுமிராண்டித் தனமானது. இத் தாக்குதலால் கனடா மிரண்டுவிடும் என்று சிலர் நினைக்கின்றனர். எத்தகைய சவாலையும் எதி ர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டோம். கனடாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஒபாமா சூளுரை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிருபர்களிடம் கூறியபோது, கனடா நாடாளுமன்றத் தாக்குதல் கோழைத்தனமானது, கடும் கண்டனத்துக்குரியது. இந்த இக்கட்டான நேரத்தில் கனடாவுக்கு அமெரிக்கா பக்கபலமாக இருக்கும். தீவிரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும் அதனை அழிப்போம். கனடா போலீஸாருடன் அமெரிக்க பாதுகாப்புப் குழுவினர் தொடர்பில் உள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பருடன் அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடி கண்டனம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள அறிக் கையில், ஜனநாயகத்தின் கோயில் நாடாளுமன்றம், அதன் மீது தாக்குதல் நடத்துவது கடும் கண்டனத்துக்குரியது, இந்திய நாடாளுமன்றம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது, எனவே கனடா மக்களின் வேதனையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் கனடாவுடன் இந்தியா எப்போதும் இணைந்திருக்கும் என்று தெரிவித்தார். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் கனடா தாக்குதல் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x