

இலங்கையில் ராணுவத்துக்கும் பல்வேறு தமிழ் போராட்ட குழுக் களுக்கும் இடையே நடந்த போரின் போது, தமிழ் சமுதாயத்துக்குள் நடந்த மோதல்களை உலகுக்கு காட்டுகிறது இலங்கைத் தமிழர் ஒருவர் தயாரித்துள்ள ஆவணப் படம் .
இலங்கையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம் (39) ‘டெமான்ஸ் இன் பாரடைஸ்’ என்ற ஆவணப் படத்தை இயக்கி உள்ளார். இது அவரது முதல் படம். பிரான்ஸ் நாட்டில் சமீபத்தில் நடந்த கான் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு அமோக ஆதரவு கிடைத்தது. ஆனால், இந்தப் படத்தை தயாரித்ததற்காக தனக்கு சிலர் துரோகி பட்டமும் வழங்கக்கூடும் என்று கூறுகிறார் ரத்னம்.
கொழும்பு நகரில் ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறும் போது, “என்னைப் பொறுத்தவரை, எனது குழந்தைப் பருவம் முதல் தமிழர்களின் அடையாளம் பற்றி எனக்குள் எழுந்த கேள்விகளை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் படத்தைப் பார்க்கிறேன்” என்றார்.
தனது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் மூலமாக 90 நிமிட ஆவணப் படத்தின் மூலம் இலங்கை உள்நாட்டுப் போரை சித்தரித்து உள்ளார் ரத்னம்.
இலங்கை தலைநகர் கொழும்பில் 1983 ஜூலை மாதம் தமிழர்களுக்கு எதிராக கலவரம். மூண்டபோது 5 வயது சிறுவனாக இருந்தார் ரத்னம். அவரது பெற்றோர் அங்கிருந்து தப்பினர். வடகிழக்கு பகுதியில் வளர் இளம் பருவத்தை கழித்தார் ரத்னம்.
அங்கு பல்வேறு தமிழர் போராட்ட குழுக்கள் செயல்பட்டதை ரத்னம் நேரில் கண்டார். இலங்கை ராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி போரிட்ட அவர்களை ரத்னம் ஹீரோக்களாக பார்த்தார்.பின்னர் அவரது குடும்பம் கண்டிக்கு புலம்பெயர்ந்தது. சில காலம் அங்கு வசித்த அவர்கள் மீண்டும் கொழும்பு நகருக்கு திரும்பினர்.
சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை உள்நாட்டுப் போர் பற்றி ஆவணப்படம் தயாரிக்க ரத்னம் வடக்கு பகுதிக்கு ரயிலில் பயணம் செய்தார்.
படத்தின் முதல் பாதியில் தனது குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் பற்றியும் உள்நாட்டுப் போர் தனது குடும்பத்தில் ஏற்படுத் திய தாக்கம் பற்றியும் விவரித்துள் ளார். இதுகுறித்து ரத்னம் கூறும் போது, “என்னுடைய தாய் தனது பொட்டை அழித்துக் கொள்வார். எனது தந்தை சிங்களர்களைப் போல உடை அணிந்து கொள்வார். கொன்று விடுவார்களோ என்ற அச் சத்தில் மிகவும் தாழ்ந்த குரலில் தமிழில் பேசிக்கொண்டோம்” என பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.
இந்தப் படம் ரத்னம் குடும்பத் தாரை மட்டும் மையமாக கொண்டது அல்ல, ரத்னத்தின் மூதாதையர் தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து 6 தலைமுறைக்கு முன்பே இலங் கைக்கு புலம் பெயர்ந்தவர்கள்.
சிங்களர்களை பெரும்பான்மை யாக கொண்ட நாடு தமிழர்களை அடிமையாக நடத்தியது மற்றும் தமிழர்கள் ஆயுதங்களை ஏந்தி போராட தொடங்கியதை சித்தரிப் பதற்காக தனது குடும்பத்தின் கடந்த கால வரலாற்றை புகுத்தி உள்ளார்.
மேலும் 1983-ல் கொழும்பு நகரின் மையப் பகுதியில் உள்ள ஒரு பஸ் நிலையத்தில் கொல்லப்படுவதற்கு முன் நிர்வாணப்படுத்தப்பட்ட தமிழர் மற்றும் அவரைப் போன்று கொல்லப்பட்டவர்களை புகைப் படம் எடுத்த சிங்கள புகைப்படக் கலைஞர் போன்றோரின் கருத்துகளையும் இந்தப் படம் சித்தரிக்கிறது.
இந்தப் படத்தை எடுத்து முடிக்க ரத்னத்துக்கு 10 ஆண்டுகள் தேவைப் பட்டது. இதுகுறித்து ரத்னம் கூறும்போது, “இந்தப் படத்தை எடுக்கத் தொடங்கியபோது மகிந்த ராஜபக்ச அதிபராக இருந்தார். அப்போது, உள்நாட்டுப் போர் பற்றி பேசவே அனைவரும் அச்சப்பட்டனர். அனைவரையும் சமாதானப்படுத்தி இந்தப் படத்தை எடுக்க மிகவும் கஷ்டப்பட்டேன்” என்றார்.
தனது உறவினர் மனோரஞ்சனின் கதையைப் பயன்படுத்தி தமிழ் சமுதாயத்தின் அரசியல் தேர்வு மற்றும் தமிழர்கள் போராட்டம் பற்றி படத்தின் 2-வது பாதியை நகர்த்துகிறார் ரத்னம். இதுகுறித்து ரத்னம் கூறும்போது, “ஆயுதம் ஏந்திய போராட்டக்குழுக்களில் சேர நானும் பல இளைஞர்களும் விரும்பினோம். ஆனால் அதை எனது மாமா மனோரஞ்சன் ஆதரிக்கவில்லை” என்றார்.
கண்டியில் வளர்ந்த மனோரஞ் சன் சரளமாக சிங்கள மொழியில் பேசுவார். ஆனால் கண்டியில் போர் தீவிரமடைந்ததும் வடக்கு பகுதிக்கு சென்றுவிட்டார். அங்கு ஒரு சிறிய இடதுசாரி குழுவில் (தமிழ் ஈழ தேசிய விடுதலை முன்னணி) சேர்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பு ஆதிக்கம் பெற்றதால் இதர அமைப்புகள் வலுவிழந்தன.
இதையடுத்து, துப்பாக்கியை போட்டுவிட்டு அவர் பத்திரிகை யாளராக பணியாற்றினார். பின்னர் விடுதலைப்புலிகள் கொலை மிரட் டல் விடுத்ததால் அவர் இலங் கையை விட்டு வெளியேறி கனடா வில் குடியேறினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இலங்கைக்கு (கண்டி) திரும்பி னார். அங்கு போரின்போது தனது குடும்பத்தினருக்கு அடைக்கலம் கொடுத்த சிங்களர்களுடன் மீண்டும் இணைந்ததை இந்தப் படம் சித்தரிக்கிறது.
மேலும் இந்தப் பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் வீரர் வாசுதேவன் அந்த அமைப்பைப் பற்றி குறை கூறுகிறார். இப்போது பிரிட்டனில் வசித்து வரும் அவர் கூறும்போது, “நாங்கள் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டோம். போராட்டம் என்ற பெயரில் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பாக தமிழர் உரிமைக்காக போராடிய போட்டி அமைப்பான டெலோவைச் சேர்ந்த 900 வீரர்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்” என்கிறார்.
இதுபோல, மனோரஞ்சன் கூறும்போது, “மாணவர் போராளிகளான செல்வி மற்றும் மனோகரன் ஆகிய இருவரும் எனது உயிரைக் காப்பாற்றினர். எதிர் கருத்தை கூறியதற்காக அந்த இருவரையும் விடுதலைப் புலிகள் அமைப்பினர் கொன்றுவிட்டனர்” என்கிறார்.
சுயபரிசோதனை வேண்டும்
போர் ஓய்ந்துள்ள நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற் காக, கடந்த கால வரலாற்றையும் அதன் விளைவாக இப்போது ஏற் பட்டுள்ள விளைவுகளையும் சுயபரி சோதனை செய்ய வேண்டியது மிக வும் அவசியம் என்கிறார் ரத்னம்.
இதுகுறித்து ரத்னம் கூறும்போது, “போர் ஓய்ந்துள்ள நிலையில் சாதிப் பிரச்சினை இப்போது இல்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு நேர் மாறான நிலை உள் ளது. விடுதலைப் புலிகள் அமைப்பி னர் சாதியை ஒழிக்கவே இல்லை. அதை அப்படியே அமுக்கி வைத் திருந்தார்கள். சாதி ஒழிந்திருந்தால், போருக்குப் பிறகு சாதி பாகுபாடு ஏன் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதை ஆராய வேண்டும்” என்றார்.
படத்தின் 2-வது பாதியில், இறுதிக்கட்ட போரின்போது ராணு வத்தின் ஒடுக்குமுறை பற்றி அவ் வளவாக சித்தரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ரத்னம் கூறும்போது, “இலங்கை ராணுவத் தின் அட்டூழியங்களை நான் மறைப் பதாகக் கருத வேண்டாம். தமிழர்கள் மட்டுமல்லாது ஒவ்வொருவரும் நேர்மையாக சுய பரிசோதனை செய்ய தயாராக இருக்கிறோமா என இந்தப் படத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படம் வெளியிட யாரா வது முன்வருவார்களா என்பது சந்தேகமாக இருந்தாலும், என்னை துரோகி என பல தமிழர்கள் முத்திரை குத்தலாம். இலங்கை மட்டுமல்லாமல், இந்தியாவில் குறிப் பாக ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் சிந்திய தமிழ் சமுதாயத்தினர் இலங்கைத் தமிழர் இயக்கி உள்ள இந்த ஆவணப் படத்தை துணிவிருந் தால் பார்க்கட்டும்” என்றார்.