

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற பொதுவாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பளிக்க, அங்கு தற்போது அயல்நாட்டவர்கள் மீதான வெறுப்புப் பேச்சு, சுவரொட்டிகள், தாக்குதல் போன்ற 100 சம்பவங்கள் புகார் அளிக்கப்பட்டுள்ளன.
ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளது. பள்ளி ஒன்றின் வாசல் சுவரொட்டி “போலந்து புழு பூச்சிகளுக்கு இனி இடமில்லை” என்ற வாசகத்தை தாங்கியிருந்தது கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் போலந்து சமூக மற்றும் பண்பாட்டு கூட்டமைப்பு கட்டடத்துக்கு வெளியேயும் இதே வாசகம் கொண்ட சுவரொட்டிகள், அட்டைகள் காணப்பட்டதால் ஸ்காட்லாந்து யார்டு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளது.
அதே போல் செயிண்ட் பீட்டர் பள்ளி வாசலில் இதே வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் காணப்பட்டதாக கேம்பிரிட்ஜ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கடந்த சனியன்று பர்மிங்ஹாம் மசூதி அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலீஸார் நிறவெறி வசைகள் கொண்ட பேனரை பறிமுதல் செய்தனர், அதில் “rapefugees not welcome” என்று அகதிகளை பாலியல் பலாத்காரவாதிகளாக உருவகித்து கூறப்பட்ட வாசகம் அடங்கியிருந்தது.
மேலும் அராஜகமாக, கிழக்கு லண்டன் அப்டன் பார்க் பகுதியில் நேரில் பார்த்தவர்களின் சாட்சியத்தின் படி போலந்து நாட்டைச் சேர்ந்த தந்தை, மகன் இருவரையும் கும்பல் ஒன்று தாக்கிய விவகாரமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மொத்தத்தில் லண்டன் தெருக்களில் ‘நிலைமைகள் பாதுகாப்பாக இல்லை” என்று லண்டனைச் சேர்ந்த பிரிட்டன் குடிமகன் பேரோனஸ் வார்சி என்பவர் தெரிவித்தார்.
சில இடங்களில் அயல்நாட்டினரை தெருவில் வழிமறித்து, “ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற நாங்கள் வாக்களித்துள்ளோம், எனவே நீங்கள் இங்கிலாந்திலிருந்து வெளியேறுவது நல்லது” என்று சிலர் மிரட்டும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
அதாவது ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது என்பது இங்கிலாந்தில் உள்ள ஐரோப்பியர்கள் உடனடியாக வெளியேறுவதற்கான முடிவாக பலரும் தவறாக புரிந்து கொண்டதே இத்தகைய சம்பவங்களுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.