

மற்றவர்களைப் போன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும்; பார பட்சம் காட்டக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி – மூன் கூறியுள்ளார்.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல் என்று இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ள நிலையில், பான் கி – மூன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மனித உரிமைகள் தினத்தையொட்டி பான் கி – மூன் வெளியிட்ட செய்தி அறிக்கையை அவரின் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெசர்கி செய்தியாளர்களிடம் அளித்தார்.
சம உரிமை தேவை
அதில் கூறப்பட்டுள்ளதாவது: “மனிதர்கள் அனைவரும் சுதந்திரம், கண்ணியம், சம உரிமையுடன் பிறந்துள்ளனர். ஓரினச்சேர்க்கையாளர்களிடம் பாரபட்சம் காட்டக்கூடாது. சுதந்திரம், அனைவருக்கும் சமஉரிமையை அளிக்கும் உலகத்தை கட்டமைக்க வேண்டும் . ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையை கண்டிக்கிறேன். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளையும் கைவிட வேண்டும்.
பெருகிவரும் இனப் படுகொலை
சர்வதேச நாடுகளின் அரசுகள் மனது வைத்தால்தான் மனித உரிமையை பாதுகாக்க முடியும். அவர்களுக்குத்தான் அந்த கடமை உள்ளது. ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல. கடந்த 20 ஆண்டுகளில் பல இடங்களில் இனப்படுகொலை நிகழ்ந்துள்ளன. சர்வதேச மனித உரிமை, மனித நேயச் சட்டங்களுக்கு புறம்பாக பெரிய அளவிலான வன்முறைகள் நடைபெற்றுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க யூத அமைப்பு ஏமாற்றம்
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றச் செயல். அதில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்ற இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க யூத உலக சேவை அமைப்பு கருத்துத் தெரிவித்துள்ளது.