

பாகிஸ்தான் ராணுவ தலைமை அலுவலகம் அருகே தலிபான் தற்கொலைப் படை தீவிரவாதி திங்கள்கிழமை வெடித்துச் சிதறியதில் 6 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 24-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தலைநகர் இஸ்லாமாபாத் அருகேயுள்ள ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவத் தலைமை அலுவலகம் உள்ளது. ராணுவ வீரர்கள் நடமாட்டம் அதிகமுள்ள இந்தப் பகுதி உயர் பாதுகாப்பு வளையமாகக் கருதப்படுகிறது. நகரின் முக்கிய வாயில்களில் ராணுவ சோதனைச் சாவடி கள் உள்ளன.
திங்கள்கிழமை 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ராவல்பிண்டி நகரின் முக்கிய வீதியில் சைக்கிளில் வேகமாகச் சென்றார். ராணுவத் தலைமையகம் அருகேயுள்ள சந்தை அருகே அவர் வந்தபோது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த ராணுவ வீரர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த இளைஞர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் 6 ராணுவ வீரர்கள் உள்பட 13 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். 24-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய ராவல்பிண்டி போலீஸார் நிருபர்களிடம் பேசியபோது, தற்கொலைப் படை தீவிரவாதிக்கு 18 முதல் 20 வயது இருக்கும், உயர் பாதுகாப்பு வளையத்துக்குள் அவர் நுழைந்தபோது ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது அந்த தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த 10 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான் என்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்துன் கவா பகுதியில் உள்ள ராணுவ கன்டோன் மென்டில் தலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய சாலையோர குண்டுவெடிப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை ராணுவ தலைமை அலுவலகம் அருகே தலிபான்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.