

அமெரிக்கத் தாக்குதலில் பாகிஸ்தான் தாலிபன் தலைவர் ஹகிமுல்லா மெசூத் கொல்லப்பட்டதால், அமைதிப் பேச்சுவார்த்தை சீர்குலைக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சவுத்ரி நிசார் அலி கான் சனிக்கிழமை பிபிசி-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் நடவடிக்கையால், பாகிஸ்தான் தாலிபன் இயக்கத்தினருடான அமைதிப் பேச்சுவார்த்தை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
அமெரிக்கா உடனான உறவு மற்றும் உடன்பாடுகள் குறித்து பாகிஸ்தான் மறு ஆய்வு செய்து வருவதாகவும் அவர் மற்றொரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்க படையினரின் ஏவுகணைத் தாக்குதலில், பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தாலிபன் தலைவர் ஹகிமுல்லா மெசூத் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் தண்டே தர்பா கேல் என்ற இடத்தில், அமெரிக்கப் படையினர் இரண்டு ஏவுகணைகள் மூலம் வெள்ளிக்கிழமை தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார்.
பைசுல்லா மேசூத் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, கடந்த 2009-ல் பாகிஸ்தான் தாலிபன் தலைவரான மெசூத், மிகவும் முக்கியத் தீவிரவாதியாகக் கருதப்பட்டவர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில், பாகிஸ்தான் அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவை பழிதீர்ப்பது உறுதி என்று பாகிஸ்தான் தாலிபன் இயக்கத்தினர் எச்சரித்துள்ளது கவனத்துக்குரியது.