

தைவானைச் சேர்ந்த லூர் சூ சகோதரிகளும் இவர்களது அம்மாவும் மிகவும் இளமையாகக் காட்சியளிக்கிறார்கள். லூர் சூ 41, ஃபேஃபே 40, ஷரோன் 36 வயதுகளில் இருக்கிறார்கள். ஆனால் இவர்களது வயதைப் பாதியாக மதிப்பிடும் அளவுக்கு இளமையாக இருக்கிறார்கள். ஓய்வு பெற்ற நடன ஆசிரியரான இவர்களது அம்மாவுக்கு 63 வயது. அவர் 30 வயது பெண்ணைப் போலிருக்கிறார்! இந்தக் குடும்பத்தை ‘the family of frozen ages’ என்று தைவான் மீடியாக்கள் அழைக்கின்றன. “என் அப்பா கூட 74 வயது தோற்றத்தில் இருக்க மாட்டார். ஆனால் அவர் புகைப்படம் எடுக்க எங்களை அனுமதிப்பதில்லை. அதனால் நாங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறோம். எங்கள் இளமைக்குப் பிரத்யேகமான விஷயங்களைக் கடைபிடிப்பதில்லை. இரவு 9 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவோம். அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிடுவோம். ஒருநாளும் காலை உணவைச் சாப்பிடாமல் இருந்ததில்லை. மூன்று வேளையும் ஆரோக்கிய மான உணவுகளைச் சாப்பிடுகிறோம். நேரத்துக்கு உணவைச் சாப்பிட்டாலே உடல் எடை அதிகரிக்காது. அதிகாலை ஒரு பெரிய தம்ளர் நிறைய வெதுவெதுப்பான நீரைப் பருகுகிறோம். தண்ணீர் அதிகம் பருகினால் உடல் நீர்ச்சத்தை இழக்காது. இனிப்பு, கரியமில வாயு கலந்த குளிர்பானங்களைக் குடிப்பதில்லை. காலையில் பால் கலக்காத காபி மட்டும் குடிப்போம். நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். இளமையும் ஆயுளும் அதிகரிக்கும்” என்கிறார் லூர் சூ. இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்து 30 ஆயிரம் பேரும் ஃபேஸ்புக்கில் 3 லட்சத்து 41 ஆயிரம் பேரும் இவர்களைப் பின்தொடர்கிறார்கள்.
உலகின் மிக இளமையான குடும்பம்!
பிரான்ஸைச் சேர்ந்த ஒயின் தயாரிப்பாளர்கள் ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஆண்டுகள் செல்லச் செல்லதான் ஒயின் ருசிக்கும். வெளியில் ஒயினைப் பாதுகாப்பதைவிட கடலுக்குள் ஒயினைப் பாதுகாத்தால் அவற்றின் தரமும் ருசியும் அதிகரிக்கிறதா என்று ஆராய்ச்சி செய்துவருகிறார்கள். இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 120 பாட்டில்களில் சிவப்பு, வெள்ளை, இளஞ் சிவப்பு ஒயின்களை நிரப்பி, மத்தியத்தரைக்கடல் பகுதியில் 40 மீட்டர் ஆழத்தில் வைத்திருக்கின்றனர். தேன் கூடு போன்று செய்யப்பட்ட அலமாரிக்குள் பாட்டில்கள் பத்திரமாக இருக்கின்றன. இதே போல 120 ஒயின் பாட்டில்கள் நிலத்திலும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே நேரத்தில் நில, நீர் ஒயின் பாட்டில்களை எடுத்துச் சுவைத்துப் பார்க்கப் போகிறார்கள். “நிலத்தைவிட கடலில் எப்பொழுதும் ஒரே விதமான வெப்பநிலை நிலவுகிறது. அதனால் கடலில் வைக்கும் ஒயின்களின் சுவைகளில் ஆரோக்கியமான மாற்றம் தெரிகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதே இந்த ஆராய்ச்சியின் நோக்கம். கடலுக்குள் நீண்ட காலம் பாட்டில்களை வைத்திருப்பதிலும் சிக்கல். கடல் கொள்ளை யர்கள் இவற்றை எடுத்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். செலவும் அதிகமாகிறது. இதற்கு முன்பும் இதுபோன்ற ஆராய்ச்சிகள் செய்யப் பட்டிருக்கின்றன. ஆனால் அந்த முடிவுகள் சொல்லப்படவில்லை. இந்த ஆராய்ச்சியில் எதிர்பார்த்த மாற்றம் கிடைத்தால் கடலுக்குள் ஒயினைத் தொடர்ந்து பாதுகாப்போம்” என்கிறார் பிலிப் ஃபார் பிராக்.
கடலுக்குள் ஒயின் ஆராய்ச்சி!