

அமெரிக்க பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 இந்தியர்கள் போட்டியிடுகின்றனர்.
435 மக்கள் பிரதிநிதித்துவ சபை மற்றும் 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் 33 உறுப்பினர் பதவிகளுக்கான பொதுத் தேர்தல் வரும் நவம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ளது. இவை தவிர 38 மாகாண ஆளுநர்கள் தேர்தல், 46 மாகாண சபைகள் உள்பட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற மருத்துவரான அமி பெரா, மூன்றாவது முறையாக 7-வது கலி போர்னியா மக்கள் பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ், கலிபோர்னியா அட்டர்னி ஜெனரல் பதவிக்கு மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
ஆளுநர் பதவிக்கு நீல் கஷ்கரி போட்டி
மற்றொரு இந்தியரான நீல் கஷ்கரி, கலிபோர்னியா மாகாண ஆளுநர் பதவிக்கான போட்டிக் களத்தில் உள்ளார். இவர் வெற்றி பெற்றால் லூசியானா ஆளுநர் பாபி ஜிண்டால், தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹாலேவை அடுத்து அமெரிக்காவின் ஆளுநராகப் பதவியேற்கும் 3-வது இந்தியர் என்ற பெருமையைப் பெறுவார்.
17-வது கலிபோர்னியா மக்களவை பிரதிநிதித்துவ உறுப் பினர் பதவிக்கு ரோ கன்னா போட்டியிட முடிவு செய்துள்ளார். அதிபர் ஒபாமா நிர்வாகத்தில் வர்த்தகத்துறை துணைச் செயலாளராகப் பணியாற்றிய அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கருதப்படுகிறது.
இதே தொகுதியில் குடியரசு கட்சி சார்பில் இந்திய டாக்டர் வனிலா மாத்தூர் சிங் களத்தில் உள்ளார். ஈராக் போரின்போது அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சேவையாற்றிய மன்னன் திரிவேதி 6-வது பென்னிஸ்வேனியா மக்கள் பிரதிநிதித்துவ உறுப்பினர் பதவிக் குப் போட்டியிடுகிறார்.
குருத்வாரா துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் மகன் வின்ஸ்கான் மாகாணத்தில் அமர்தீப் கலேகா, குடியரசு கட்சியின் மூத்த தலைவர் பால் ரயானை எதிர்த்து களம் இறங்குகிறார். இவர் 2012 வின்ஸ்கான் குருத்வாரா துப்பாக் கிச் சூட்டில் கொல்லப்பட்ட குருத்வாரா தலைவர் சத்வந்த் கலேகாவின் மகன் ஆவார்.
உபேந்திரா ஷிவ்குலா 12-வது நியூஜெர்ஸி மக்கள் பிரதிநிதித்துவ உறுப்பினர் பதவிக்கும், ஸ்வாதி தந்த்னேகர் முதலாவது லோவா மக்கள் பிரதிநித்துவ உறுப்பினர் பதவிக்கும், மஞ்சு கோயல் 8-வது இலியோனிஸ் மக்கள் பிரதி நிதித்துவ உறுப்பினர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.