

சீனாவில் புதிதாக அமைக்கப்பட்ட ராக்கெட் படை கண்டம் விட்டு கண்டம் பாயும் 100 ஏவுகணைகளுடன் கடந்த ஆண்டு தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய ராணுவப் படையை கொண்ட சீனா, நவீன காலத்துக்கு ஏற்ப, தனது ஆயுத பலத்தையும் புதுப்பித்து வருகிறது. மேலும் முப்படைகளின் பயிற்சிகளையும் அவ்வப்போது நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் சீனா ராணுவப் பயிற்சி நடத்தியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் பயிற்சியில் முப்படைகள் மட்டுமின்றி புதிதாக உருவாக்கப்பட்ட ராக்கெட் படையும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சீனா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘நூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டன. இதில் ராணுவம் சார்பில் 15 பிரிகேடியர்கள் கலந்து கொண்டனர். விமானப்படை சார்பில் தொலைதூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணை பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்தப் பயிற்சிகள் அனைத்தும் மேற்கு பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் சீனக் கடலில் நடத்தப்பட்டது. தவிர ராக்கெட் படையினர் சார்பில் கண்டம் விட்டு கண்டம் பாயும் 100 ஏவுகணைகளுடன் 20-க்கும் மேற்பட்ட பயிற்சிகள் நடத்தப்பட்டன’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர கடற்படை சார்பில் 2 விமானம் தாங்கிய போர்கப்பலில் இருந்து துப்பாக்கிச் சூடு பயிற்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறை போர் விமானங்களையும் சீனா விமானப் படை மேம்படுத்தி வருகிறது. ஜே-20 ஸ்டீல்த் போர் விமானம் என பெயரிடப்பட்ட அந்த விமானம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதேபோல டாலியன் கடற்படைத் தளத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் போர் கப்பலையும் சீனா விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சீனாவின் மக்கள் சுதந்திர ராணுவ (பிஎல்ஏ) படையில் மொத்தம் 3 லட்சம் வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.