Published : 07 Feb 2014 10:12 AM
Last Updated : 07 Feb 2014 10:12 AM

சிரியாவின் பாரம்பரியச் சின்னங்கள் அழிந்துவிடும்: யுனெஸ்கோ துணை இயக்குநர் வேதனை

சிரியாவில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிகளால் அந்த நாட்டின் பாரம்பரியச் சின்னங்கள் அழிந்து விடும் என்று யுனெஸ்கோ துணை இயக்குநர் பிரான்ஸ்கோ பேண்ட்ரின் தெரிவித்துள்ளார்.

முற்காலத்தில் கிறிஸ்தவம், பின்னர் இஸ்லாமிய நாகரிகத்தின் தொட்டிலாக விளங்கிய சிரியாவில் அலிப்போ உள்ளிட்ட 6 பகுதிகள் யுனெஸ்கோவால் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

கடந்த 2 ஆண்டுகளாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரால் 6 பாரம்பரியச் சின்னங்களும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. மிச்சமிருக்கும் சில வரலாற்றுச் சின்னங்களிலும் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து யுனெஸ்கோ துணை இயக்குநர் பினாஸ்கோ பேண்ட்ரின், நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது:

சிரியாவில் சுமேரிய நகரமான மேரி முதல் பழங்கால நகரங் களான எல்பா, பால்மைரா, பாமியாவரை சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கிடைக்கும் அரிய பொருள்கள், மாபியா கும்பல், போதை கடத்தல் கும்பல்கள் மூலம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ரூ.42 ஆயிரம் கோடி அளவுக்கு கலைப் பொருள்கள் கடத்தப்பட்டு விற்கப்படுவதாகத் தெரிகிறது.

உள்நாட்டுப் போரால் அழிந்து வரும் அந்த நாட்டின் பாரம்பரியச் சின்னங்களைப் பாது காக்க யுனெஸ்கோ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக லெபனானில் யுனெஸ்கோவின் கிளை அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத் துக்காக ஐரோப்பிய யூனியன் நிதி ஒதுக்கியுள்ளது.

தற்போதைய நிலையில் பெரும்பாலான புராதன சின்னங்கள் அழிந்து விட்டன. குறிப்பாக மத்திய காலகட்டத்தைச் சேர்ந்த அலெப்போ நகரச் சந்தை, 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உம்மயாத் மசூதி ஆகியவற்றை குறிப்பிடலாம்.

பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றுள்ள போதிலும் சில நல்ல விஷயங்களும் அங்கு நடந்துள்ளன. உள்நாட்டுப் போர் தொடங்கியதும் நாட்டின் 34 அருங்காட்சியகங்களில் இருந்த கலை பொக்கிஷங்களை அரசுத் துறை அதிகாரிகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிவிட்டனர். அதனால் அவை தப்பிவிட்டன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x