

இத்தாலியில் மத்திய பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 73-ஆக அதிகரித்துள்ளது.
இத்தாலியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை 3.36 மணியளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு பல நகரங்களில் கட்டிங்கள் குலுங்கின. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இத்தாலியின் தலைநகரான ரோமிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நார்சியாவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளை காட்டும் கூகுள் வரைப்படம்.
இந்த நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ள அமடிரைஸ் நகரத்தின் மேயர் கூறும்போது, ”நகரின் பாதி பகுதிகள் அழிந்துவிட்டன” என்றார்.
அக்குமொலி கிராமத்தில் ஒருவர் இறந்ததாக உள்ளூர் ஊடகமான ஏஜிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அக்குமொலி கிராம மேயர் ஸ்டிபனே பெட்ருக்சி கூறும்போது, “இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் இடிப்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்டு வருகிறோம். இந்த நிலநடுக்கத்தினால் டெலிபோன் சேவை, மின்சார சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் மீட்பு பணி நடைபெற தாமதமாகிறது” என்றார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு 6.3 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.