

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீப்புடன் பிரதமர் நவாஸ் ஷெரீப் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி, பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான் கான், சூபி மதத் தலைவரும், பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சித் தலைவருமான தாஹிர் உல் காத்ரி ஆகியோர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை இரவு இப்போராட்டம் முற்றிய நிலையில், போராட்டக்காரர்கள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்தை முற்றுகை யிடச் சென்றனர்.அப்போது போராட்டக் காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 450-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களும் 100-க்கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்தனர்.
எனினும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்தது. ஞாயிற்றுக்கிழமை இரவு மழை காரணமாக அங்கு அமைதி நிலவியது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை போராட்டக்காரர்கள் தலைமைச் செயலகத்தின் வாயிலை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்ததால், அவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
உருட்டுக்கட்டைகளுடன் தலைமைச் செயலக வளாகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் தலைமைச் செயலக ஊழியர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கினர். போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் இவர்களை வெளியேற்ற முயன்றனர். என்றாலும் போலீஸாரின் இம்முயற்சி வெற்றி பெறவில்லை.
அரசு டி.வி. அலுவலகம் மீது தாக்குதல்
இதைத் தவிர 800-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அரசு தொலைக்காட்சியான பாகிஸ்தான் டி.வி. கட்டிடத்துக்குள் நுழைந்தனர். இவர்கள் அங்கிருந்த கேமராக்களை அடித்து நொறுக்கினர். கட்டுப்பாட்டு அறைக்குள்ளும் நுழைந்து அங்கிருந்த சாதனங்களை உடைத்தனர். இதனால் அரசு டி.வி.யின் ஒளிபரப்பு தடைபட்டது.
அங்கு ராணுவம் விரைந்து சென்று போராட்டக்காரர்களை உடனே வெளியேறுமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து போராட்டக் காரர்கள் அங்கிருந்து வெளியேறினர். பாகிஸ்தானில் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து ஞாயிற்றுக்கிழமை இரவு அந்நாட்டு ராணுவம் மேற்கொண்ட அவசர ஆலோசனைக்குப் பிறகு இம்மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன.
ராணுவத்தின் பல்வேறு பிரிவு தளபதிகளுடன், தலைமை தளபதி ரஹீல் ஷெரீப் ஆலோசனை மேற்கொண்டபோது, சனிக்கிழமை இரவு ஏற்பட்ட வன்முறைக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
“வன்முறைக்கு இடமளிக்காமல் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைந்து அரசியல் தீர்வு காணவேண்டும். ஜனநாயகத்துக்கு ராணுவம் தொடர்ந்து ஆதரவாக இருக்கும்” என்று இக்கூட்டத்துக்குப் பின் வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருந்தது
போராட்டத்தை ஒடுக்க படை பலத்தை பிரயோகிப்பது நிலமையை மேலும் சிக்கலாக்கும் என்று எச்சரித்திருந்த ராணுவம், பிரதமர் நவாஸ் ஷெரீபை காப்பாற்றும் முயற்சியில் இறங்க மாட்டோம் என்பதை சூசகமாகத் தெரிவித்திருந்தது.
ராணுவ தளபதியுடன் பிரதமர் சந்திப்பு
ஞாயிற்றுக்கிழமை ராணுவம் மேற்கொண்ட ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் நவாஸ் ஷெரீப், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தினார். பஞ்சாப் மாநில முதல்வர் ஷாபாஸ் ஷெரீபை அவர் இஸ்லாமாபாத் வருமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் அவர் ராணுவ தலைமை தளபதி ரஹீல் ஷெரீபை சந்தித்துப் பேசினார்.பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு தீர்வுகாணும் வழிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.