குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை: சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை: சர்வதேச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Updated on
1 min read

குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் ரோன்னி ஆப்ரஹாம் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை பாகிஸ்தான் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டார். ஏகமனதாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

வழக்கு பின்னணி:

இந்திய கடற்படையைச் சேர்ந்த முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ். கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி அவர் ஈரானில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், மாஸ்கெல் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரை அந்த நாட்டு உளவுத் துறையினர் கைது செய்தனர். அவர் பாகிஸ்தானுக்கு எதிராக சதி செய்ததாகவும் கராச்சி குண்டுவெடிப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த ராணுவ மாஜிஸ்திரேட், குல்பூஷண் ஜாதவுக்கு ஏப்ரல் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் முறையிடப்பட்டது.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம்:

குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (வியாழக்கிழமை) இந்திய நேரப்படி சரியாக 3.30 மணிக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கினர்.

அப்போது நீதிபதிகள், "குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதிக்கக்கூடாது என்ற இந்தியாவின் முறையீட்டில் நியாயம் இருக்கிறது. எனவே மறு உத்தரவு வரும்வரை ஜாதவுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை பாகிஸ்தான் நிறுத்திவைக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தின் இந்த இடைக்கால உத்தரவை பாகிஸ்தான் ஏற்று நடக்க வேண்டும்.

சிறையில் அடைக்கப்பட்ட குல்பூஷண் ஜாதவை சந்திக்க இந்திய தரப்பில் தூதரகம் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் முட்டுக்கட்டை போட்டது ஏற்புடையதல்ல. வியன்னா ஒப்பந்தத்தின்படி குல்பூஷன் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளித்திருக்க வேண்டும்.

ஜாதவ் கைது செய்யப்பட்ட சூழலில் சந்தேகம் இருக்கிறது. மேலும், இந்த வழக்கில் மறு உத்தரவு வரும்வரை குல்பூஷன் ஹாதவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது" எனத் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in