Published : 08 Jan 2014 10:15 AM
Last Updated : 08 Jan 2014 10:15 AM

மூளை நரம்பியல் ஆராய்ச்சி: அமெரிக்க இந்திய விஞ்ஞானிக்கு ரூ.5 கோடி நிதியுதவி

அமெரிக்க இந்தியரும், நரம்பியல் விஞ்ஞானியுமான கலீல் ரஸாக், காது கேளாமையை தடுக்கும் வகையில் மூளை நரம்பியல் துறையில் ஆராய்ச்சியை மேற்கொள்ள 8 லட்சத்து 66 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5 கோடியே 40 லட்சம்) நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

இந்த தொகையை தேசிய அறிவியல் அறக்கட்டளை அவருக்கு வழங்கவுள்ளது. இந்த நிதியுதவியைப் பெற்று, முதியவர்களுக்கு காது கேளாமை ஏற்படுவதைத் தடுப்பது தொடர்பாக அவர் ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளார்.

வயது அதிகரிப்பதாலும், நோய் காரணமாகவும் பலர் காது கேட்கும் திறனை இழக்கின்றனர். இதற்கு காது கேட்கும் திறன் தொடர்பான மூளை நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களே காரணம். இந்த மாற்றங்களைத் தடுப்பது குறித்து கலீல் ரஸாக் ஆய்வு செய்யவுள்ளார்.

கலீல் ரஸாக் சென்னையைச் சேர்ந்தவர். அவர் சென்னையில் இருந்தபோது காது கேட்கும் திறன் இழந்த குழந்தைகளுக்கான தொலைபேசியை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவர் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் சைக்காலஜி மற்றும் நரம்பியல் அறிவியல் துறை உதவிப் பேரா சிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் கூறுகையில், “வயதாவதால் ஏற்படும் காது கேளாமை கோளாறுகளை தடுத்துவிட முடியும். சில நேரங்களில் அதைத் தடுக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் கேட்கும் திறனை இழக்கும் காலத்தை தள்ளிப்போடலாம். முதியவர்களுக்கு ஏற்படும் காது கேளாமைக்கு மூளையி லிருந்து காது பகுதிக்குச் செல்லும் நரம்புகளில் ஏற்படும் மாற்றங்களும் முக்கிய காரண மாக இருக்கின்றன.

ஒலி அலைவரிசையை கிரகித்து பிரித்து உணரும் ஆற்றலில் ஏற்படும் குறைபாடே இதற்கு காரணம். மூளையில் உள்ள நரம்புகளில் ஏற்படும் மாறுபாடுகளைத் தடுப்பதற்கான முறைகளைத்தான் ஆய்வு செய்து வருகிறேன்.

காது கேளாமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு கேட்கும் திறனை மேம்படுத்துவதற்கான நவீன கருவிகள் பரிந்துரைக்கப் படுகின்றன. இந்த கருவிகள் ஒலியை அதிகரித்து அளிக்கும் தன்மையில்தான் தயாரிக்கப் பட்டுள்ளது. உண்மையான பிரச்சினை, அந்த ஒலியை சரியாக அடையாளம் கண்டு புரிந்துகொள்ள இயலாமைதான். இதற்கு ஒலியை கிரகித்து அறிந்து கொள்ள வேண்டிய மூளையில் மாற்றம் ஏற்படுவதே காரணமாகும்.

மூளைக்குத் தகவலை எடுத்துச் செல்லும் நியூரான் செல்கள் தொடர்பாக ஆய்வு செய்வதன் மூலம், அவற்றை சரிசெய்வதற்கான வழி முறைகளைக் கண்டறிய முடியும்” என்றார். மூளை நரம்பியல் சார்ந்த ஆராய்ச்சியை தவிர, வௌவால் தொடர்பான கருத்தரங்குகளை யும் கலிபோர்னியா அறிவியல் மையத்தில் கலீல் ரஸாக் நடத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x