

இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைது செய்யப்பட்டபோது தூதருக் குரிய பாதுகாப்பு உரிமைகளைப் பெற்றிருக்கவில்லை என்று நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா, விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்துள்ளார். அதில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை முக்கிய ஆதாரமாக இணைக்கப் பட்டுள்ளது.
“நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தேவ யானி துணைத் தூதராகப் பணியாற்றி வந்தார். அலுவலக ரீதியான பணிகளுக்கு மட்டுமே அவருக்கு தூதரக உரிமை உண்டு. அவரது தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு தூதரக உரிமை கிடையாது.
தேவயானியின் வீட்டில் வேலை செய்த பணிப்பெண் சங்கீதா, இந்திய தூதரகப் பணியில் ஈடுபடவில்லை. தேவயானியின் வீட்டில்தான் வேலை செய்தார். எனவே, பணிப்பெண்ணுக்கு குறைவாக ஊதியம் வழங்கியது, அதிக நேரம் பணியில் ஈடுபடுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் தப்ப முடியாது.
ஐ.நா. சபை பொதுஅவைக் கூட்டத்தையொட்டி இந்தியாவுக்கான ஐ.நா. ஆலோசகராக தேவயானி நியமிக்கப்பட்டிருந்தார் என்ற வாதத்திலும் உண்மையில்லை. அவர் ஐ.நா. தூதரகப் பணியில் ஈடுபடவில்லை.
ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தி யத் தூதர்கள் பட்டியலில் தேவ யானியின் பெயர் இல்லை. அவர் நியூயார்க் இந்தியத் தூதரகத்தில் துணைத் தூதராக மட்டுமே பணியாற்றினார். ஐ.நா. ஆலோசகராகப் பணியாற்ற வில்லை. எனவே ஐ.நா. தூதருக்குரிய உரிமைகளும் அவருக்கு கிடையாது.
இந்த வகையில் விசா மோசடி தொடர்பாக டிசம்பர் 12-ம் தேதி அவர் கைது செய் யப்பட்டபோது அவருக்கு தூதரக உரிமை இல்லை” என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஐ.நா. தூதருக்குரிய உரிமை களைப் பெற்றிருந்த தன்னை கைது செய்தது தவறு என்று நீதிமன்றத்தில் தேவயானி மனு தாக்கல் செய்திருந்தார். அதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா இப்போது நீதிமன்றத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்துள்ளார்.
விசா மோசடி வழக்கில் தேவயானியை கைவிலங்கிட்டு கைது செய்தது, ஆடைகளைக் களைந்து சோதனை நடத்தியது, போதை அடிமைகளுடன் ஒரே அறையில் அடைத்து வைத்தி ருந்தது ஆகியவற்றுக்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் இருநாடு களுக்கும் இடையில் பனிப்போர் நீடித்த நிலையில் ஜனவரி 9-ம் தேதி அமெரிக்காவில் இருந்து தேவயானி வெளி யேற்றப்பட்டார். தற்போது அவர் டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணி¬யாற்றி வருகிறார். அமெரிக்க குடியுரிமை பெற்ற தேவயானியின் கணவர், 2 குழந்தைகள் அந்த நாட்டில் வசித்து வருகின்றனர்.