

வங்கதேசத்தில் உள்ள ஒரு பிரபல உணவகத்துக்குள் புகுந்த ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 வெளிநாட்டினர், 2 போலீஸார் பலியாயினர். தாக்கு தலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். ஒருவர் உயிருடன் பிடிபட்டார்.
தலைநகர் டாக்காவில் குல்ஷன் பகுதியில் பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ளன. மிகவும் பாதுகாப்பு மிகுந்த இப்பகுதியில் உள்ள ஹோலே ஆர்டிசன் பேக்கரி உணவகத்துக்கு வெளிநாட்டினர் அதிக அளவில் வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.20 மணிக்கு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்த உணவகத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று அந்தப் பகுதியை சுற்றி வளைத்து இரவு முழுவதும் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இதனிடையே, பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவின் பேரில் அங்கு விரைந்து சென்ற ராணுவம் நேற்று காலையில் தாக்குதலைத் தொடங்கியது. தாக்குதல் தொடங்கிய அடுத்த 13 நிமிடங்களில் அங்கிருந்த 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். பிணைக் கைதிகளாக இருந்த 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இதை யடுத்து, விடிய விடிய 10 மணி நேரம் நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது.
இதுகுறித்து, ராணுவ இயக்கு நர் பிரிகேடியர் ஜெனரல் நயீம் அஷ்பக் சவுத்ரி கூறும்போது, “ராணுவம் தாக்குதலை தொடங்கு வதற்கு முன்பே பிணைக் கைதிகள் 20 பேரை தீவிரவாதிகள் கொன்று விட்டனர். இவர்களில் பெரும்பாலா னோரின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டினர்” என்றார்.
தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்ததும் பிரதமர் ஷேக் ஹசீனா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, “தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவா திகள் சுட்டுக் கொல்லப்பட்டு பிணைக் கைதிகள் மீட்கப்பட்ட தற்காக இறைவனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் கொடூரமான தாக்குதல். தீவிரவாதத்தை வேரறுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்படும்” என்றார்.
இந்திய பெண் பலி
இந்தத் தாக்குதலில் பலியானவர் களில் தாருஷி (19) என்ற இந்திய பெண்ணும் அடங்குவார். அவர் பலியானதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் 30 பேர் காயமடைந்தனர். உயிருடன் மீட்கப்பட்டவர்கள் இந்தியா, இலங்கை மற்றும் ஜப்பான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.