

பிரிடோரியா என்எஸ்ஜியில் இந்தியா உறுப்பினராக தென்ஆப்பிரிக்கா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்காக அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடி முதல்கட்டமாக மொசாம்பிக் நாட்டுக்கு சென்றார். அங்கிருந்து நேற்று அதிகாலை தென்ஆப்பிரிக்காவின் பிரிடோரியாவுக்கு சென்றார்.
அங்கு அந்த நாட்டு அதிபர் ஜேக்கப் ஜுமாவை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, உற்பத்தி, சுரங்கம், மருந்து தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன்பின் இரு தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:
அணுசக்தி மூலப்பொருள் விநியோக குழுவில் (என்எஸ்ஜி) இந்தியா உறுப்பினராக தென்ஆப்பிரிக்கா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. அதற்காக அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவும் தென்ஆப்பிரிக்காவும் இனவாதத்தையும் காலனி ஆதிக்கத்தையும் அஹிம்சை வழியில் எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட நாடுகள் ஆகும்.
மகாத்மா காந்தி வழக்கறிஞராக பணியாற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு வந்தார். சுமார் 20 ஆண்டுகள் அவர் தென்ஆப்பிரிக்காவில் தங்கியிருந்தார். இங்குதான் அவர் சுதந்திர போராட்டத் தலைவராக உருவெடுத்தார். அவர் இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென்ஆப்பிரிக்காவுக்கும் சொந்தமானவர்.
பூமியில் பிறந்த மனிதர்களில் மகாத்மா காந்தியும் நெல்சன் மண்டேலாவும் தன்னிகரற்ற தலைவர்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தென்கொரிய தலைநகர் சியோலில் கடந்த மாதம் நடந்த என்எஸ்ஜி கூட்டத்தில் இந்தியா உறுப்பு நாடாக தென்ஆப்பிரிக்கா ஆட்சேபம் தெரிவித்தது. எனினும் பிரதமர் மோடி அதிபர் ஜேக்கப் ஜுமாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அந்த நாடு தனது ஆதரவைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.