

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 38 வயது பெண்ணுக்கு நேற்று விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க வரலாற்றில் பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது சற்று அரிதான நிகழ்வு. 1976-க்குப் பின் இதுவரை 15 பெண்களுக்கு மட்டுமே மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 1,400 ஆண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லிசா கோலிமேன் என்ற அந்த பெண் தனது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 9 வயது சிறுவனை சித்தரவதை செய்து கொன்றுள்ளார். 2004-ம் ஆண்டு இந்த சம்பவம் நிகழ்ந்தது. விசாரணை முடிந்து 2006-ம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அச்சிறுவனை வீட்டில் அடைத்து வைத்து உணவு கூட கொடுக்காமல் லிசா துன்புறுத்தியுள்ளார். அவனது உடம்பில் சிகரெட்டால் சூடுபோட்டுள்ளார். கம்பால் அடித்து உதைத்துள்ளார். இறந்தபோது அச்சிறுவனின் உடலில் 250 காயங்கள் இருந்தன. டெக்சாஸ் மாகாணத்தில் இந்த ஆண்டு இதுவரை 9 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் லிசா 2-வது பெண் ஆவார். விஷ ஊசி போட்ட 12-வது நிமிடத்தில் அவரது உயிர் பிரிந்தது என்று காவல் துறையினர் உறுதி செய்தனர்.