

ஒலிம்பிக் போட்டிகள் கண்ட பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியான சியாரா மாநிலத்தில் வரலாறு காணாத வறட்சியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர், விவசாயிகள் படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நூற்றாண்டு காணாத வறட்சியினால் இப்பகுதியில் நீரின்றி இறந்த பசுமாட்டின் மண்டை ஓடு கடும் வெயிலில் நடுச்சாலையில் கிடக்கிறது. இன்னொரு இறந்த பசுமாட்டின் துர்நாற்றம்... வறட்சிப்பேயின் குறியீடுகளில் சிக்கித் தவிக்கிறது சியாரா மாநிலத்தின் நோவா கானா விவசாயப் பகுதி.
விவசாயி கெர்கினால்டோ பெரைரா தூசிகளுக்கும் விலங்குகளின் சடலங்களுக்கு இடையே உடைந்த மனதுடன் நடந்து செல்கிறார். மொத்தம் 30 கால்நடைகளின் சடலங்கள் பாதையில் ஆங்காங்கே கிடப்பதால் அந்த இடமே திறந்தவெளி சுடுகாடாக காட்சியளிப்பதாக ஏஎப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“விலங்குகள், கால்நடைகள் பசியிலும் தாகத்திலும் இறந்து விடுகின்றன. இதுதான் உண்மை நிலவரம் இந்த 5 ஆண்டுகள் கடும் வறட்சியில் எண்ணிலடங்கா கால்நடைகள் இறந்துள்ளன” என்கிறார் அந்த விவசாயி.
2012-ம் ஆண்டு முதல் ஒரு சொட்டு மழை கூட காணாத வடகிழக்கு மாகாணமாக சியாரா உள்ளது. ஒட்டுமொத்த இடமுமே ஏதோ காட்டுத்தீயில் கருகியது போன்ற காட்சியாக உள்ளது என்கிறார் அவர் மேலும் கூறியபோது.
ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் 5 ஆண்டுகளாக சொட்டு நீர் கூடக் காணவில்லை. இதற்கு ஏகப்பட்ட காரணங்களை சுற்றுச்சூழல் நிபுணர்கள் கூறுகின்றனர். சக்தி வாய்ந்த பசிபிக் எல் நினோ விளைவு, வடக்கு அட்லாண்டிக் அதிவெப்பமடைதல், சியாராவில் வானிலை மாற்ற விளைவாக 50 ஆண்டுகளில் வெப்ப நிலை 1.2 செல்சியஸ் அதிகரித்திருப்பது ஆகியவை பிரதான காரணமாக கூறப்படுகிறது.
விவசாயி பெரைரா தனது 3 பசுமாடுகளையும் 10 ஆடுகளையும் அதிகுறைவான விலைக்கு விற்க வேண்டி வந்துள்ளது, காரணம் எலும்பும்தோலுமாக இருக்கும் அந்த விலங்குகளுக்கு யார் அதிக பணம் கொடுப்பார்கள்?
நோவா கானாவில் 70 குடும்பங்கள் அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே கஷ்டப்பட்டு இந்த 5 ஆண்டுகளில் ஒரு சில நாட்களே உணவைப் பார்த்துள்ளன.
செரடாவோவில் துணிகள் துவைப்பது, குடிநீர் அருந்துவதே ஆடம்பரச் செயலாக மாறியுள்ளது. இதே நிலைதான் 8 மாநிலங்களில் நிலவுகிறது. இப்பகுதிகளில் 2 கோடியே 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் கிராமப்புற நிலவரங்களைப் பற்றி கூறுவதற்கொன்றுமில்லை.
உலகச் சுகாதார அமைப்பு குடிநீர், சமையல் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்கு நாளொன்றுக்கு 50 முதல் 100 லிட்டர் தண்ணீர் பரிந்துரை செய்துள்ள நிலையில் பிரேசில் அரசால் இப்பகுதியில் 20 லிட்டர் தண்ணீரையே வழங்க முடிகிறது.
மக்கள் தங்களிடம் உள்ள கழுதைகளை கொண்டு தண்ணீர் எடுக்க பலமைல்கள் சென்றாலும் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் அவலம் நிலவி வருகிறது. சிலர் தாங்களே கிணறுகளைத் தோண்டினாலும் அந்த நீரை நாய் கூட அருந்த மறுக்கும் நிலைதான் இருந்து வருகிறது.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் சமூகப் பாதுகாப்புத் தொகையாக மாதம் ஒன்றிற்கு 130 டாலர்கள் கிடைக்கிறது.
சுற்றுலாவுக்கு சுத்தமாக மூடுவிழா!
குவிக்சாடாவில் ‘தி பாரடைஸ் பார்’ என்பது செட்ரோ ஏரியைப் பார்க்கும் விதமாக அமைந்திருப்பதாகும், இந்த விடுதி இன்றும் திறந்துதான் இருக்கிறது, ஆனால் வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. 50,000 ஒலிம்பிக் நீச்ச குளங்களுக்குச் சமமான இந்த ஏரி சுத்தமாக நீரின்றி வறண்டு கிடக்கிறது.
நூற்றுக்கணக்கான கடல் ஆமைகளின் சடலங்கள், லட்சக்கணக்கான இறந்த மீன்கள் ஏரியின் கரையில் ஒதுங்கியுள்ளன.
இந்தப் பகுதியில் உயிர்ப்பரவலே வறட்சி காரணமாக காணாமல் போயுள்ளது. இங்கு மீன் பிடி தொழிலில் ஈடுபட்டவர்களுக்கும் பெரிய அடி விழுந்துள்ளது.
பொருளாதார சீர்குலைவும் ஊழலும்!
இந்த நூற்றாண்டின் மிக மோசமான் பொருளாதார பின்னடைவினால் அரசு உதவித்தொகைகளை தாமதப்படுத்தி வருகிறது. மேலும் சான் பிரான்சிஸ்கோ நதியை திசைமாற்றும் மிகப்பெரிய திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, காரணம் முக்கிய ஒப்பந்ததாரர் நாட்டின் மிஅக்ப்பெரிய ஊழலில் சிக்கியுள்ளார்.
அரசியல், பொருளாதார நெருக்கடிகள் நீராதார நெருக்கடியில் வந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் “எங்களைக் காப்பாற்ற நாங்கள் ஆண்டவனைத்தான் நம்பியிருக்கிறோம், தேர்தல் முடிந்தவுடன் அரசியல்வாதிகள் எங்களை மறந்து விடுகின்றனர்” என்று துயரம் தோய்ந்த முகத்துடன் செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார் விவசாயி செபாஸ்டியோ பாட்டிஸ்டா.