

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
கிளீவ்லன்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட ஹிலாரி கிளின்டன், "டொனால்ட் டிரம்ப் ஒரு வெள்ளையின சர்வாதிகாரி. அவரது நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது" என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.
அவர் மேலும் விமர்சித்தபோது, "டொனால்ட் டிரம்ப் என்ற இம்மனிதர் ஆபிரகாம் லிங்கனின் குடியரசு கட்சியிலிருந்து வந்தவர். ஆனால் தற்போது குடியரசு கட்சி டொனால்ட் டிரம்பின் கட்சியாக மாற்றப்பட்டுள்ளது. இது நமது ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தல். டொனல்ட் டிரம்பின் நடவடிக்கைகள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் குடியரசு கட்சியை சேர்ந்தவராக இருங்கள், ஜனநாயக கட்சியை சேர்ந்தவராக இருங்கள்.. எனக்கு கவலை இல்லை. ஆனால், டொனால்ட் டிரம்பை தோற்கடிப்பதில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
டொனல்ட் டிரம்ப் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு இடப்பெயர்தவர்களை தாக்கிப் பேசியுள்ளார். டிரம்பை பொருத்தவரை நாட்டில் உள்ள எல்லா மதத்தையும் தடை செய்ய விரும்புகிறார். டொனால்ட் டிரம்ப் பற்றி வெளியாகும் பத்திரிக்கை செய்திகள் எதுவும் ரசிக்கும்படி இல்லை" என்றார் ஹிலாரி.
மேலும் அண்மையில் அமெரிக்காவில் பேட்டன் ரூஜ் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கும் கண்டனத்தை தெரிவித்தார்.
இறுதியாக காவல் அதிகாரிகள் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்தும் வகையில் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று கூறினார்.